அண்ணாமலை அவர்களின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை மதுரை மேலூரை அடைந்த பொது அங்கு அவர் ஆற்றிய உரை

மதுரை மாவட்டம் மேலூரில் இந்த சுட்டெரிக்கும் வெய்யிலைப் பொருட்படுத்தாமல் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .ஆனால் ஒரு பெரிய முயற்சியை நாம் மேற்கொள்ளும்போது நம்மை நாமே வருத்திக் கொண்டு மக்களோடு மக்களாக நடக்கும்போது சில உண்மைகள் புரிந்துவிடும்..தமிழக மக்கள் நல்லவர்கள், வல்லவர்கள். ஆற்றல் மிகுந்தவர்கள். ஆனால் திராவிட மாயையில் கட்டுண்டு கிடக்கிறார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும். திமுகவினர் சொல்வதெல்லாம் பொய் என்பதைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். இதுதான் இந்த ” என் மண் என் மக்கள் ” யாத்திரையின் நோக்கமாகும். அதைச் செய்து விட்டால் நமக்கு 50% வெற்றி கிடைத்து விடும்.

நமது பாரதப் பிரதமரின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியை மக்கள் பார்த்தார்கள். திமுகவின் 28 மாத கால ஆட்சியையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார் மக்களுக்காக வாழ்கின்றனர் யார் குடும்பத்துக்காக வாழ்கின்றனர் என்பதை மக்கள் பார்த்துத் தெளிவு பெறுவது எளிதாகிறது.; எல்லா கிராமத்துக்கும் தாய் போன்ற கிராமம் மேலூர் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சிறப்பு கொண்டது மேலூர். விவசாயத்துக்குப் பேர்போன ஊர் இது.

இந்த ஊரில் தயாரிக்கப்படும் ஏர்க் கலப்பை பிரசித்தி பெற்றது. எங்கள் ஊரிலிருந்து இங்கு வந்து ஏர்க் கலப்பை வாங்கிச் செல்வார்கள். முதன்முதலில் ஏர்க் கலப்பை அறிமுகப்படுத்தி அதற்காக ஒரு தொழிற்சாலை அமைத்து அதற்கு சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பெயரில் போஸ் கலப்பைத் தொழிற்சாலை என்று பெயர் வைத்த வி.மாணிக்க தேவர் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இது மேலூரின் அடையாளமாக உள்ளது.

ஆன்மீகத்தைப் பொறுத்தவரை திருவாசகத்தை இயற்றிய மாணிக்க வாசக ஸ்வாமிகள் பிறந்த ஊர் திருவாதவூர். அந்தப் பெருமையும் மேலூருக்கு உள்ளது.
அதே போல் தமிழகத்திலேயே மிகச் சிறந்த, நேர்மையான, ஆற்றல் மிகுந்த ஒரு ஏழைப் பங்காளனை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய ஊர் மேலூர்.

நேர்மைக்கு ஒரு உதாரணமாகத் திகழ்ந்தவர் கக்கன் ஐயா அவரகள் அவரது கடைசிக் காலத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் ஒரு சாதாரண வார்டில் படுத்திருந்தார். அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் அவரை சிறப்பு வார்டுக்கு மாற்ற வேண்டும் என்று சொன்ன போது அதைக் கக்கன் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்குப் பிறகுதான் முன்னாள் அமைச்சர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை தர வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. ஆனாலும் கக்கன் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு சாதாரண வார்டிலே தனது கடைசிக்கு காலத்தைக் கழித்த பெருமை அய்யா கக்கன் அவர்களைச் சாரும்.

ஒரு பக்கம் கக்கன் அய்யா.இன்னொருபக்கம் நமது சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி. கக்கன் அவர்கள் இருந்த போது அரசியல் எப்படி இருந்தது?. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் எப்படி உள்ளது?
செந்தில் பாலாஜி அரசு மருத்துவ மனையிலிருந்து தப்பித்து தனியார் மருத்துவ மனைக்குச் செல்வதற்காக டில்லியிலிருந்து மிகப் பெரிய வழக்கறிஞர்களைக் கொண்டு வந்தனர். சாதாரண மக்கள் அரசு மருத்துவ மனைக்குச் செல்கின்றனர்.. க்யூவில் நின்று சிகிச்சை பெறுகின்றனர்.

ஆனால் அரசு அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சரும் அவரது அமைச்சர்களும் அரசு மருத்துவமனையை விட தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை சிறப்பாக இருக்கும் என்று காவேரி மருத்துவமனைக்குச் செல்கின்றனர். கோடிக்கணக்கான தமிழ்ச் சொந்தங்கள் தினமும் அரசு மருத்துவ மனைக்குச் செல்கின்றனர். அப்படியானால் அரசு மருத்துமனைகள் சரியில்லையா? அங்கு இருக்கும் மருத்துவர்கள் சரியில்லையா? இதையெல்லாம் தமிழ்ச் சொந்தங்கள் மன்னிக்கப் போவது கிடையாது. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.

கக்கன் அவர்களது தம்பிக்கு காவல் துறையில் சேர வேண்டும் என்று ஆவல் வந்தது. ஆனால் கக்கன் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்ததால் மக்கள் ஏதோ தனது தம்பிக்கு தான் வேலை போட்டுக் கொடுத்துவிட்டதாக நினைப்பார்கள் என்று நினைத்து அதை அனுமதிக்கவில்லை. ஆக கக்கன் அவர்களது காலத்திய அரசியல் நாகரீகம் எப்படி இருந்தது? இப்போதைய திராவிட மாடல் சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி காலத்திய அரசியல் நாகரீகம் எப்படி உள்ளது?

இவர்தான் volley ball – அதாவது கைப்பந்து விளையாட்டுக்காக இந்தியாவின் முதல் அர்ஜுனா விருதை வாங்கிய பழனிச்சாமி.(ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறார்). இவரது விளையாட்டைப் பார்த்து இவரை Black Panther ( கருஞ்சிறுத்தை ) என்று அழைத்தார்கள். இவர் மேலூரைச் சேர்ந்தவர். நமது பிரதமர் மோடி அய்யா அவர்கள் 2018ல் சென்னையில் மத்திய அரசால் நிர்மாணிக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கிற்கு ஆ.பழனிசெசாமியின் பெயரைச் சூட்டினார்.1961ல் அர்ஜுனா விருது வாங்கியவர் பழனிச்சாமி அவர்கள். பாஜக ஆட்சிக்கு வரும்போது மேலூரில் ஆ. பழனிச்சாமியின் பெயரில் ஒரு நவீன வசதிகள் கொண்ட உள்விளையாட்டு அரங்கம் கட்டித் தருவோம் என்று உறுதி அளிக்கிறோம்.

விவசாயிகள் உரம் வாங்குகின்றனர், சராசரியாக ஒரு 45 கிலோ மூட்டையின் விலை 260 ரூபாய். உங்களுக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும். அதன் உண்மையான விலை மூட்டைக்கு 2200 ரூபாய். ஆனால் உங்களுக்கு வரும் விலை 260 ரூபாய். மீதி மோடி அவர்களின் அரசு உங்களுக்கு மானியமாக வழங்குகிறது. உரத்துக்கு 90% மானியம் வழங்கும் நமது மோடி அய்யா மீண்டும் பிரதமராக வரவேண்டுமா ? கூடாதா?

பெட்ரோலுக்கு அடுத்தபடியாக அதிககமான அன்னியச் செலாவணி உர இறக்குமதிக்கு செலவாகிறது. 2022 துவங்கி 2015 வரை உரத்துக்குக் கொடுக்கக் கூடிய மானியம் மட்டுமே 3,68, 676 கோடி ரூபாய். திமுக பெண்களுக்கு மாதாமாதம் 1000ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தால் அதற்கு 7000 கோடி ரூபாய் தேவை. அதுவும் மத்திய அரசின் பணம். . 2300 கோடி ரூபாய்.தமிழ் நாட்டிலுள்ள 137 விவசாய மண்டிகளும் மத்திய அரசின் விவசாய வர்த்தகத் வலைத் தளமான e-nam தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இன்று தமிழ் நாட்டில் 37 லட்சம் விவசாயிகள் சமூக வலைத்தளச் சந்தையில் (e-nam )இணைந்துள்ளனர்.

கம்யூனிஸ்ட்ஸ்ட் கட்சியின் வெங்கடேசன் இந்தத் தொகுதி எம்பி . யாருக்கும் பிரயோஜனம் இல்லாத ஒரு எம்பி. சுய விளம்பரம் செய்வதில் கெட்டிக்காரர். தன்னைப் பற்றி போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்வார். எங்காவது புத்தக வெளியீட்டு விழா நடந்தால், அதுவும் கம்யூனிஸ்டுகள் வெளியிட்டால் அங்கே வெங்கடேசன் இருப்பார். முல்லைப் பெரியாறு அணை மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என்று உச்சநீதி மன்றம் கூறியது. ஆனால் நீதி மன்றத்தைக் கேரளா கம்யூனிஸ்ட் அரசு மதிக்கவில்லை, அதை எதிர்த்து கம்யூனிஸ்டு எம்பி வெங்கடேசன் ஒரு பூனையைப் போன்றாவது கத்தினாரா?

விவசாயிகளுக்கு மதிப்பு அளிப்பவர் நரேந்திர மோடி அவர்கள் மட்டும்தான். தமிழ் நாட்டில் ராகுல் காந்தியை உயர்வாகப் பேசுவார்கள் கம்யூனிஸ்டுகள், ஆனால் கேரளாவில் அவரை ‘டம்மி பீஸ்’ என்பார்கள். ஊட்டி காரட்டை பஞ்சாபில் வாங்குகிறார்கள். மோடி அவர்கள் வந்தபின்பு உங்கள் பகுதி மட்டும் விளை பொருள்களுக்கான சந்தை அல்ல இந்தியா முழுதுமே உங்களது சந்தை என்று மோடி அவர்கள் திட்டமிட்டார் . பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு மட்டும் 1231 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது..

முல்லைப் பெரியாறு அணையை 142 அடி உயர்த்தினால் எட்டரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
பேபி அணையைச் சரி செய்த பின்பு முல்லைப் பெரியாறு அணை மட்டத்தை உயர்த்துவோம் என்றது. கேரளா. எப்போது அதைச் சரி செய்வீர்கள் ? எப்போது முல்லைப் பெரியாறு அணை மட்டத்தை உயர்த்துவீர்கள்?இங்குள்ள கம்யூனிஸ்டு எம்பி அங்குள்ள கம்யூனிஸ்டு அரசைக் கேள்வி கேட்கிறாரா ?

கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை இங்கு வந்து கொட்டுகின்றனர்…தேனியிலும் , தென்காசியிலும் கொட்டுவார்கள். இதை கம்யுனிஸ்டு எம்பி கேட்கிறாரா? ஒரு எம்பியாக உங்களது உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய இந்த கம்யூனிஸ்டு எம்பி வெங்கடேசன் பாஜகவின் மாநிலக் செயலாளர் எஸ் ஜி சூர்யாவைக் கைது செய்து சிறையில் அடைத்தார். ஏனென்றால்
‘1993 முதல் 2023 வரை 30 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் 225 தூய்மைத் தொழிலாளர்கள் பணி செய்யும்போது இறந்துள்ளனர்.. ஜூன் மாதத்தில் கடலூர் மாவட்டத்தில் ஒரு கம்யூனிஸ்டு கவுன்சிலர் ஒரு தூய்மைப் பணியாளரை மலக் குழியில் இறங்கச் சொல்லி அதனால் அவர் உயிரிழந்தார். ‘இதைப் பற்றியெல்லாம் பேச மாட்டீர்கள் ஊரிலுள்ள விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசுவீர்கள்’ என்று கேட்டதற்கு கம்யூனிஸ்டு எம்பி வெங்கடேசன், திமுகவுடன் சேர்ந்து நமது மாநிலச் செயலாளரைக் கைது செய்ய வைத்தனர். இந்த வெட்கங்கெட்ட பிறவிகளுக்கு எதற்கு மரியாதை கொடுக்க வேண்டும்?
உங்களுக்கு உண்மையாகவே வெட்கம் மானம் சூடு சொரணை உள்ளதா என்று வெங்கடேசன் அவர்களைக் கேட்கிறேன்

ரேஷன் கடையில் வழங்கும் அரிசிக்கு விலை 34 ரூபாய். மோடி அவர்கள் தருவது 32 ரூபாய், திமுக அரசு கொடுப்பது 2 ரூபாய். ஆனால் இவர்கள் போடும் போட்டோவைப் பாருங்கள் ரேஷன் கடைக்கு வெளியே , மஞ்சப் பைகளில் கருணாநிதி , ஸ்டாலின் இவர்களின் போட்டோக்கள் . ஆனால் 32 ரூபாய் கொடுக்கும் மோடி அவர்களின் போட்டோ இல்லை. ஆகவே ஸ்டாலின் அவர்கள் டாஸ்மாக்கிலும் உங்கள் போட்டோவை வைக்க வேண்டும். இங்கு குடிக்க வரும் சகோதரர்களே ,கஜானா நிரம்புவதற்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள். அதற்கு நன்றி.என்று வாசகம் வைக்கலாமே.

மத்திய அரசு தமிழக அரசுக்கு கடந்த 9 ஆண்டுகளில் வழங்கிய நிதி 10 லட்சத்து 76000 கோடி ரூபாய்.
அந்தப் பணம் எங்கு சென்றது என்று நீங்கள் கேட்கலாம் .ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தை நெம்பர் 1
மாநிலமாக உயர்த்துவேன் என்று சொன்னார் அதைச் செய்தாரா/ செய்தார் ! அதாவது தமிழகத்தை நெம்பர் 1 கடன் வாங்கும் மாநிலமாக உயர்த்தினார்! மாநிலத்தின் கடன் 7 லட்சத்து 53000 கோடி ரூபாய்.
இந்தியாவிலேயே மிக அதிகமாகக் கடன் வாங்கிய மாநிலம்.

நமது சகோதரர் கேட்கிறார். அவர்கள் இவ்வளவு பணம் வாங்கினால் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளதே? விவசாயப் பெருமக்களுக்கு தண்ணீர் வழங்கவில்லையே என்று. நமது மதுரைக்காரர் அமைச்சர் பி டி தியாகராஜன் ஒன்று பேசினார். அதாவது மகனும் ( உதயநிதி) ,மருமகனும் ( சபரீசன்) 30000 கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர் என்று. அந்த ஆடியோவை நாம் வெளியிட்டோம். ‘இவரது தகப்பனார் அதாவது கருணாநிதி தனது ஆட்சி முழுவதிலும் கொள்ளை அடித்ததை விட அதிகமாகக் இவர்கள் 2 ஆண்டுகளில் கொள்ளை அடித்தனர் என்று அதில் பேசியுள்ளார். இதற்குப் பிறகு அவரை ஒரு உபயோகமில்லாத துறைக்கு மாற்றினார். நான்கு மாதங்களாக தியாகராஜன் அவர்களிடமிருந்து சத்தமே காணோம்!

மக்கள் குடிக்க வேண்டுமென்றால் கள்ளுக் கடையைத் திறக்கவேண்டும். அதைச் செய்தால் பனை மரம் வைத்திருப்பவர்களெல்லாம் பணக்காரர்கள் ஆவார்கள். ஆகவே பாஜக வின் கொள்கை கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும்.. இல்லை என்றால் சாராய ஆலை வைத்திருக்கும் டீ ஆர் பாலு தான் பணக்காரர் ஆவார்.

அடுத்து அமைச்சர் மூர்த்தி அவர்களுக்கு என்ன நடக்கும் பாருங்கள். செந்தில் பாலாஜிக்கு நடந்ததெல்லாம் ஒன்றும் இல்லை. உடனே நான் சொல்லித்தான் நடக்கிறதென்று சொல்வார்கள். அப்படி இல்லை. இவ்வளவு அநியாயம் செய்தால் அதற்கு அனுபவிக்கத்தான் வேண்டும்.

பாரதீய ஜனதா கட்சியின் அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் நன்றி. நாம் கூட்டம் நடத்தும் அனைத்து . இடங்களிலும் நிகழ்ச்சி முடிந்த பிறகு தூய்மை பாரதம் இயக்கத்தை அடியொற்றி நமது கட்சியின் குழுக்கள் அந்த இடத்தை சுத்தம் செய்வார்கள். அவர்களுக்கும் நன்றி..

பாரத் மாதா கி ஜெய்!
பாரத அன்னையின் புகழ் ஓங்குக!

தொகுப்பு: இரா.ஸ்ரீதரன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top