பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் திட்டத்தின் தொடக்க விழா தஞ்சையில் நேற்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி. பழனிமாணிக்கம் மத்திய அரசுக்கு எதிராகப் பேசினார். இதற்காக அங்கிருந்த பாஜக தொண்டர்கள் கண்டனம் தெரிவித்து, பிரதமர் மோடி வாழ்க, பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கங்களை எழுப்பினர்.
திமுக எம்.பி. பேசியதை கண்டிக்கும் வகையில் பாஜகவினர் வெளியே வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோரை விடியல் அரசின் போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரது கைதைக் கண்டித்து புதுக்கோட்டை பழனியப்பா முக்கம் பகுதியில் பாஜகவினர் நேற்று (ஆகஸ்ட் 6) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு மாவட்டத் தலைவர் அ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற மாவட்டப் பொதுச் செயலாளர் குரு ஸ்ரீராம், நகரத் தலைவர் லட்சுமணன் உட்பட 28 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதற்கு அவ்வப்போது பாஜகவினர் தகுந்த ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்து வருவதை தாங்கிக்கொள்ள முடியாமல் இது போன்ற கைது நடவடிக்கையில் இந்த விடியல் அரசு ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.