‘‘திராவிட மாடலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை எதிர்த்து நிற்கும் கன்னியாகுமரி மாவட்டம், தமிழக ஜனநாயகத்தின் பெருமை,’’ என, மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் நாள் நடைபயணத்தை நிறைவு செய்து, இரவி புதூர்கடை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
திராவிட மாடல் ஆட்சியில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து நிற்பது, கன்னியாகுமரி மண் தான். அத்தகைய பெருமை வாய்ந்த கன்னியாகுமரி, தமிழக ஜனநாயகத்துக்கு கிடைத்த பெருமை.
கடந்த, 2014-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த போது நிலக்கரி, காமன்வெல்த், அலைக்கற்றை என எல்லாவற்றிலும் ஊழல் இருந்தது. ஆனால் தனது ஒன்பது ஆண்டு ஆட்சியில் நேர்மையாளர் மட்டுமே, இந்த நாட்டில் ஆள முடியும் என்ற நிலையை பிரதமர் மோடி உருவாக்கி இருக்கிறார்.
பிரதமர் மட்டுமல்ல; அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் மீது கூட, ஊழல் குற்றச்சாட்டு இல்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது, அவர் தன்னைத் தானே, ‘நம்பர் ஒன் முதல்வர்’ என்று பட்டம் சூட்டிக் கொண்டார். ஆனால், மது குடிப்பதிலும், கடன் வாங்குவதிலும் தான், தமிழகம் நம்பர் ஒன்னாக உள்ளது.
குடிகாரன் என்று சொல்லக் கூடாதாம். மது பிரியர் என்று சொல்ல வேண்டுமாம். ‘மதுவில் இருந்து வரும் வருமானம், தொழு நோயாளி கையில் இருக்கும் வெண்ணெய்க்கு சமம்’ என, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கூறினார்.
ஆனால் பதவி பிரமாணம் எடுத்த அமைச்சர் உதயநிதி, ‘டி – 20’ கிரிக்கெட் மேட்ச் பார்க்கப் போகும் போது, சாராய கம்பெனி பிராண்ட் சட்டையை போட்டுச் செல்கிறார்.
கடந்த 1969-ல், காமராஜர் நாகர்கோவிலில் போட்டியிட்டபோது ஒற்றுமையாக இருந்த நாடார் சமூகத்தை, கிறிஸ்துவ நாடார், ஹிந்து நாடார் என்று பிரித்தவர் கருணாநிதி. இங்குள்ள அமைச்சர் மனோ தங்கராஜுக்கு மலை விழுங்கி மனோ தங்கராஜ் என்று பெயர் வைக்கலாம். இவர் நினைத்தால், கேரளா கொண்டு செல்லும் கனிம வளங்களை தடுக்க முடியாதா? இவ்வாறு அவர் கூறினார்.