வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 318 எம்.பி.க்களை பெற்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமையும் என சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது, ஒரு மாதமாக நாடு முழுவதும் ஒரே கலவரமாக இருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் கொந்தளிப்பு பகுதியை போன்று உருவாக்கம் செய்தனர். கடந்த 2019ல் மேகாலயா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று வந்தேன். அங்குள்ள நிர்வாகிகளுடன் கலந்து பேசியிருக்கிறேன்.
மணிப்பூர் சமவெளி, மலை என இரண்டு பகுதியாக இருக்கிறது. அங்கு 10 சதவீத நிலத்தில் 60 சதவீத மக்கள் வாழ்கின்றனர். மலை பகுதியில் 40 சதவீத மக்கள் வசிக்கின்றனர். அங்கு குக்கி, நாகா, மெய்தி சமுதாய மக்கள் அதிகளவு உள்ளனர்.
இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஏற்பட்ட மோதல் சரி செய்யப்பட்டு, அங்கு சூழ்நிலை கட்டுக்குள் வந்து மக்கள் அமைதியான முறையில் வாழ்ந்த சமயத்தில் தான் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினர். இதற்கு காரணமான நபர்களை அம்மாநில அரசு கைது செய்துள்ளது.
மேலும் மணிப்பூரில் அனைத்து தரப்பினரும் மலை ஜாதியினர் பட்டியலில் வந்துவிட்டால் எந்த பிரச்னையும் இருக்காது. இதுதான் நம் மாநில மக்களின் கருத்து.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மட்டுமே 318 எம்.பி.க்கள் வரை கிடைப்பார்கள். ஒவ்வொரு தொண்டரும் வேட்பாளர் பற்றி கவலை கொள்ளாமல் நாடு முழுவதும் நிற்பது பிரதமர் மோடி மட்டுமே என்பதை எண்ணத்தில் வைத்து தேர்தல் பணி ஆற்ற வேண்டும், என்றார்.