தேசப்பற்றுடைய அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் பா.ஜ.,வில் இணைந்து இந்தியாவை காப்பாற்ற முன் வரவேண்டும் என மத்திய விமானப்படை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் பாரதிய ஜனதாவின் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு சார்பில் மாநிலத் தலைவர் ராமன் தலைமையில் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் விமானசேவை இணையமைச்சர் வி.கே. சிங் நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது:
மத்திய அரசு ராணுவத் துறையை நவீன தொழில் நுட்பங்களுடன் உலக நாடுகள் அஞ்சுகின்ற வகையில் கட்டமைத்து இருக்கிறது. நவீன யுக்திகளை கொண்ட ராணுவ தளவாடங்களும் வாங்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதாவால் மட்டுமே நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும்.
எனவே தேசப்பற்றுடைய அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் பாஜகவில் இணைந்து இந்தியாவை காப்பாற்ற முன் வரவேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்களை தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டுகளின்றி ஆட்சி செய்து உலகளவில் இந்தியாவை உற்று பார்க்க வைத்துள்ளார். எனவே அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கூடத்தில் துணைத்தலைவர் துரைசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி உட்பட முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.