சனாதன ஒழிப்பு மாநாட்டில் காவி வேட்டியில் கலந்து கொண்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: இந்து சமயத்தை தொடர்ச்சியாக கொச்சைப்படுத்துவது திமுகவுக்கு புதிதல்ல. இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் தங்களது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருமே திமுகவுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சனாதனத்தை ஒழிப்போம், வேரறுப்போம் மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 2 அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் அவர்கள்.
அவர்கள் பேசுவதற்கு முன்பாக திக தலைவர் வீரமணி சொல்கிறார், சனாதன தர்மமும், இந்து மதமும் இரண்டும் ஒன்றேதான். வேறு, வேறு கிடையாது. அதன் பின்னர் பேசிய உதயநிதி, சனாதனத்தை வேரறுப்போம் என்று சொல்கிறார்.
இதன் அர்த்தம் என்ன ? அதே மேடையில் அமர்ந்திருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இவற்றை வேடிக்கை பார்க்கிறார். இவர்களுக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய கண்டனக் குரல் வந்தது.
இதன் பின்னர் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுகவில் உள்ளவர்கள் வேடிக்கையான, விசித்திரமான அறிக்கைகளைக் கொடுக்கின்றனர். சனாதனம் வேறு, இந்து மதம் வேறு. நாங்கள் தவறாகப் பேசவில்லை. பாஜக பொய் பிரச்சாரம் செய்துவிட்டது எனக் கூறுகிறார்கள்.
மக்களின் கண்டனத்தை பார்த்து, நாங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை என பல்டி அடிக்கின்றனர். அதிலும் ஸ்டாலின் மிகப்பெரிய அறிக்கை ஒன்றை கொடுத்திருந்தார், என்று பேசினார்
அதனைத் தொடர்ந்து, சட்டத்தை மதித்து அனைவரும் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட செல்வோம். யாரும் சட்டத்தை கையில் எடுக்க உரிமை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.