ஜம்முவின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் ராணுவ கர்னல் மற்றும் மேஜர், டி.எஸ்.பி. என மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு காரணமான பாகிஸ்தானுக்கு எதிராக அப்பகுதியில் போராட்டம் நடந்தது.
ஜம்முவில் அனந்தநாக் மாவட்டத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அதே போன்று நேற்று (செப்டம்பர் 13) இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவத்தில் ராணுவ கர்னல் மன்பிரீத்சிங், மேஜர் ஆசிஷ் தோனக் மற்றும் போலீஸ் டி.எஸ்.பி., ஹூமாயுன் பட் ஆகிய மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர். முன்னதாக ரஜோரி மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் ராணுவ ஜவான் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அனந்தநாக் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
எத்தனை அடி வாங்கியும் திருந்தாத பாகிஸ்தான்
தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஏவிவிட்டு வருகிறது. இவை அனைத்தையும் ராணுவ வீரர்களும் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் ஒரு முறை (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) தாக்குதல் நடத்தினால் தான் பாகிஸ்தானின் ஆட்டம் அடங்கும் என பொது மக்கள் இப்போது வெளிப்படையாகக் கூறத் துவங்கி உள்ளனர். 370 சட்டம் இருந்த வரை ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.