சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து ஹிந்து அமைப்பினர் நேற்று (செப்டம்பர் 25) டெல்லியில் கண்டனப் பேரணி நடத்தினர். இதனை முன்னிட்டு தமிழ்நாடு இல்லத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சார்பில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி நடத்தப்பட்ட சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, சனாதனத்தை எதிர்த்தால் போதாது, அதனை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் சனாதனத்தை பல்வேறு நோய்களுடன் ஒப்பிட்டும் பேசியதால் நாடு முழுதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
வடமாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பல இடங்களில் உதயநிதிக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இதற்குக் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் நேற்று (செப்டம்பர் 25) டெல்லியில் உள்ள பாஹடுகஞ்ச் பகுதியில், ஆராம்பாக் உதாசீன் ஆசிரமத்தில் இயங்கி வரும் ‘சனாதன தர்ம ரக் ஷா மன்ச்’ என்ற அமைப்பின் சார்பில் பல்வேறு ஹிந்து அமைப்புகள் திரண்டன. காலை 10:00 மணிக்கு ஏராளமான ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனை அருகில் உள்ள ஷிவ் ஹனுமான் மந்திருக்கு எதிரில் கூடி, போராட்டம் நடத்தினர். அங்கிருந்து, புதிய தமிழ்நாடு இல்லம் நோக்கி புறப்பட்டனர். பேரணியாக புறப்பட்டுச் சென்ற இவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
தமிழ்நாடு இல்லத்தை நெருங்கிய அவர்களை, தடுப்புகள் அமைப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த இடத்திலேயே உதயநிதி மற்றும் திமுகவை கண்டித்து பலரும் ஆவேசமாக பேசினர். பின் தமிழ்நாடு இல்லத்தை நோக்கி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.