‘எனது பெயரில் வீடு எதுவும் இல்லை; ஆனால், நாட்டின் லட்சக்கணக்கான மகள்களை வீட்டு உரிமையாளர்களாக மாற்றியுள்ளது பா.ஜ., அரசு’ என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
குஜராத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் சோட்டா, உதேபூர் மாவட்டத்தின் போடலி நகரில், ரூ.5,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது;
சாமானிய மக்களுடன் குறிப்பிடத்தக்க நேரத்தைச் செலவிடுவதால், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நான் அறிவேன். அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண எப்போதும் முயற்சிப்பேன். நாட்டு மக்களுக்காக 4 கோடி வீடுகளை எனது அரசு கட்டித் தந்துள்ளது. ஏழைகளின் கண்ணியத்தை காக்க தொடர்ந்து பணியாற்றுகிறோம். லட்சக்கணக்கான வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசு திட்டங்களின் மூலம் வீடு கட்டிய பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், இப்போது லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த தேசிய கல்விக் கொள்கை, இறுதியாக எனது அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இடஒதுக்கீட்டை முன்வைத்து அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள் தங்களது ஆட்சிக் காலங்களில் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.