கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற 3,749 கோடி ரூபாய் அளவில் வங்கி கடன் வழங்கும் விழாவில் தனக்கு கடன் தரவில்லை என்ற கோஷமிட்ட நபரை மேடைக்கு வரவழைத்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், தகுதி இருந்தால் கடன் தர ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
நேற்று, கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அதில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து பிரதம மந்திரியின் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் 3,749 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கும் விழா ஒன்று. இவ்விழா கொடிசியா வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அதிமுக எம்.எல்.ஏ,க்கள், மற்றும் பாஜகவின் தேசிய மகளிர் அணித்தலைவரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், வங்கியின் உயர் அதிகாரிகள் உட்பட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது மத்திய அரசு வசூலிக்கும் செஸ் வரியை முழுவதுமாக மத்திய அரசே வைத்துக் கொள்வதில்லை என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன் அந்த நிதியில் இருந்து நபார்டு வங்கி மூலம் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கும் 1 சதவீத வட்டியில் கடன் வழங்குவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது கூட்டத்தில் கடைசியில் நின்று கொண்டிருந்த ஒருவர் கையை உயர்த்தி தான் பல மாதங்களாக வங்கிக்கு நடையாய் நடப்பதாகவும் தனக்கு தொழில் கடன் தரவில்லை என்றும் ஆவேசமாக குரல் எழுப்பியதால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது
செய்தியாளர்கள் குரல் எழுப்பியவரை படம் பிடிக்க தொடங்கிய நிலையில் மேடையில் நின்றிருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்த நபரை மேடைக்கு வருமாறு அழைத்தார். மேடைக்கு வந்த அவரிடம் மைக்கை கொடுத்து விவரங்களை கூறுங்கள், எதற்காக கடன் வழங்கவில்லை என்று விசாரிப்போம் என்று கேட்டுக் கொண்டார் நிர்மலா சீத்தாராமன்.
இதையடுத்து சதீஷ் என்ற அந்த நபர் தான் கிராஸ் கட் சாலையில் தொழில் செய்து வருவதாகவும், தொழில் கடன் கேட்டு, தான் கணக்கு வைத்திருக்கும் பேங் ஆப் பரோடா வங்கிக்கு பல மாதங்களாக அலைந்து திரிவதாகவும், தனக்கு கடன் இதுவரை வழங்கப்படவில்லை என்றார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் விரைவாக விசாரித்து ஆவணங்கள் சரியாக இருந்தால் கடன் வழங்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் டால்க் டெல் லைப் ஸ்டைல் என்ற பெயரில் சதீஷ் தனது மனைவி சுபஸ்ரீ மற்றும் மகள் ஸ்மிரிதி ஆகியோரை பார்டனராக கொண்டு தொழில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், மனைவி கிரெடிட்கார்டுக்கு செலுத்த வேண்டிய 1 லட்சத்து 15 ஆயிரத்து 808 ரூபாயை செலுத்தவில்லை என்றும், மகளது வங்கி கணக்கில் ஓவர் டியூ உள்ளதாலும் சிபில் ஸ்கோர் திருப்தியாக இல்லாததால், சதீஷ் அளித்த கடன் விண்ணப்பத்தை நிராகரித்துக்கதும் தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை மறைத்து மத்திய நிதியமைச்சர் பங்கேற்ற விழாவில் வேண்டும் என்றே சதீஷ் கூச்சலிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்த இதுபோன்ற நபர்களை சில கட்சிகள் தூண்டிவிடுவதும் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடன் பெறுபவர்கள் தங்களிடம் இருக்கின்ற ஆதாரங்கள் உண்மையாகவும், சிபில் ஸ்கோர் சரியாகவும் இருந்தால் கட்டாயம் வங்கிகள் கடன் வழங்கும் என்று தெரிவித்தனர் வங்கி அதிகாரிகள்.