சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று வள்ளலாரின் திருவுருவச்சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளலார் திருவுருவச்சிலையை திறந்து வைத்த பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு சனாதனவாதி. சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் எனக் கூறுபவர்களை என்ன சொல்வது என தெரியவில்லை. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது சனாதனத்தின் வெளிப்பாடு. இவ்வாறு ஆளுநர் பேசினார்.
முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், திருவருட்பிரகாச வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் காட்டும் அவரது செய்தி ஒரு நிலையான உலகத்திற்கு முக்கியமானது. அவரது ஒளி நம் தேசம் பெருமை அடைய வழிகாட்டட்டும், என்று கூறியுள்ளார்.