அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று ( 19.10.2023)  தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த அக்.9ஆம் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் புழல் சிறைக்கு திரும்பினார். தொடர்ந்து அக்.10ஆம் தேதி அமைச்சரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை அக்.16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம், அமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், எனவே அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் தர வேண்டும் எனவும் அமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை கடுமையாக எதிர்த்த அமலாக்கத்துறை,  துறையில்லா அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி ஜாமீனில் சென்றால் வழக்கு விசாரணையைச் சீர்குலைக்க முயற்சிப்பார் என வாதிட்டது.மேலும் அவரது சகோதரர் தேடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்குவது சரியாக என்றும் சோதனைக்குச் சென்று ஐடி ஊழியர்களை தாக்கிய வகையில் அவரது நடத்தை அவர் நியாயமாக செயல்படுவார் என்று சொல்லவில்லை என்றும் அமலாக்கத்துறையினரால் வாதிடப்பட்டது. 

 இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜாமின் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன், அமலாக்கத் துறையின் வாதங்களை ஏற்று,  சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு மருத்துவக் காரணங்களுக்காக கூட ஜாமின் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top