விடியாத திமுக ஆட்சிக்கு வந்தபின் மின்சாரக் கட்டணத்தை 15 முதல் 50 சதவீதமாக உயர்த்தி முக்கிய வாழ்வாதாரமான விசைத் தறிகளை முடக்கி விட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று மாலை (அக்டோபர் 19) என் மண் என் மக்கள் பயணம், அலகு மலையின் மீது வீற்றிருக்கும் அருள்மிகு முத்துக்குமார பாலதண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோவில் அமைந்திருக்கும் பல்லடம் தொகுதியில், அலைகடல் எனத் திரண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீது கொண்டுள்ள பேரன்பை வெளிப்படுத்திய மக்கள் சூழ வெகுசிறப்பாக நடைபெற்றது.
மாபெரும் கர்நாடக இசை, புல்லாங்குழல் கலைஞரான சஞ்சீவ ராவ் போன்ற தெய்வாம்ச மேதைகள் பிறந்த பல்லடம். அலகுமலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகப் பிரபலமானது.
பல்லடத்தில் மட்டும் 3 லட்சம் கறிக்கோழி பிராய்லர் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு நாளில் 10 லட்சம் பிராய்லர் கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பல்லடம் தொகுதியில் மட்டும் 80,000 விசைத்தறிகள் உள்ளன. சோமனுர், -அவிநாசி, -பல்லடம், -திருப்பூர் ஆகிய ஊர்கள் ஜவுளித்துறையில் இன்று முன்னோடியாக இருப்பதற்குக் காரணம் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்.
ஒரு நாளில் மட்டும் இந்த தொகுதியில் மருந்துக் கட்டுக்கு பயன்படுத்தப்படும் காடா துணி 1 கோடி மீட்டர் தயாரிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 20 கோடி மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது. இங்கு ஜவுளிச் சந்தை அமைக்க வேண்டும் என்ற தறி வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக பாஜக முன்னெடுத்து செல்லும்.
திமுக ஆட்சிக்கு வந்தபின், மின்சாரக் கட்டணத்தை 15 முதல் 50% உயர்த்தி, இந்த பகுதியின் முக்கிய வாழ்வாதாரமான விசைத்தறிகளை முடக்கியது. இந்த பகுதி பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டு டாலர் சிட்டி, டல் சிட்டி என துண்டு சீட்டை பார்த்து ஒப்பித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். பீக் ஹவர் கட்டணம் ஒரு ரிஷ்க்கு 35 ரூபாய் இருந்தது இப்போது 150 ரூபாய். நிலைக் கட்டணம் மாதம் 17,200 ரூபாய். இந்தக் கட்டண உயர்வுக்குக் காரணமான அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை, சாட்சிகளைக் கலைக்க முயற்சி செய்துள்ளார், இவரது தம்பி அசோக் தலைமறைவாக உள்ளார், விசாரணைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியுள்ளனர், இவர் தமிழக அரசின் துறை இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார் என்ற காரணங்களால் மீண்டும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஊழல் வாதிகளின் கூடாரமாக திமுக இருக்கிறது. ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் சோதனையில் 400 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லூரியின் போலி கட்டண ரசீதுகள், சாராய ஆலையில் மட்டும் 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு என மொத்தமாக 1200 கோடி ரூபாய் அளவிலான வரி ஏய்ப்பு செய்துள்ளார். மக்களுக்கு அரசு நலத்திட்டங்களாக திருப்பி கொடுக்க வேண்டிய வரிப்பணத்தை பதுக்கி வைத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட செட்டிப்பாளையம் சாலையில் அரசு மதுபான கடை எண் 1830, பொது மக்களுக்கு இடையூறாக அமைந்துள்ளதால், கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் செய்தனர். செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி தமிழகத்தையே உலுக்கிய, பொது இடத்தில் மது குடிப்பதை தட்டி கேட்ட பாஜக உறுப்பினரையும், அவரது குடும்பத்தில் நான்கு பேரையும் வெட்டிக் கொன்ற கோர சம்பவம் இங்கு தான் நடைபெற்றது.
மதுவினால் வரக்கூடிய வருமானம் புழுத்து தொழுநோயாளியின் கையில் இருக்கும் வெண்ணையை போன்றது என்றார் முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான அண்ணாதுரை. 2016ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டுவருவோம் என்றார் கருணாநிதி. இன்று திமுக ஆட்சி தானே நடக்கிறது. பாக்கெட் போட்டு விற்கலாமா, 10 ரூபாய் அதிகமாக வாங்கலாமா என மது ஆலை நடத்தும் டி.ஆர். பாலு, ஜகத்ரட்சகன் போன்றோர் கோடிகள் சம்பாதிக்க, பல பொதுமக்களை எப்படி வறுமையில் தள்ளலாம் என்றே இந்த திராவிட டாஸ்மாக் மாடல் அரசு ஆலோசித்து வருகிறது.
நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஒரே சமயத்தில் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வழங்கியுள்ளார். அதில் ஒன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பல்லடம் வெள்ளக்கோவில் வரை 47 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை ரூ.274 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரதமரின் வீடு திட்டம், முத்ரா கடனுதவி, குழாய் குடிநீர் திட்டம், இலவச கழிப்பறை வசதி, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டம் என பாரதப் பிரதமரின் பல்வேறு திட்டங்கள் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர்.
ஆனால் திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான, வாக்குறுதி எண் 138 – நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி, வாக்குறுதி எண் 139 – விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து அரசு பள்ளி சீருடை கொள்முதல், வாக்குறுதி எண் 140 – அரசு நூல் கொள்முதல் நிலையம் என ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. மேலும், காற்றாலை மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யும் திருப்பூரில் சிறப்பு மின் வழித்தடம் உருவாக்கப்பட்டு மின் இழப்புகள் ஏற்படாமல் முழுமையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும், வர்த்தக மேம்பாட்டை உறுதி செய்ய திருப்பூரில் வர்த்தக மையம் அமைக்கப்படும் என்றெல்லாம் கொடுத்த வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
அரசு விழாக்களில் தன்னை அழைக்காமல் புறக்கணிப்பதாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி வேதனை தெரிவித்தார். இது தான் திமுகவின் சமூக நீதி. மகளிர் உரிமை மாநாடு என்று அரசியல் வாரிசுகள் மாநாடு நடத்துவது, சமூகநீதி என்று நாடகம் போடுவது தான் திமுகவின் உண்மை முகம். திமுகவாலும், இந்தத் தொகுதி கம்யூனிஸ்ட் எம்பியாலும் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த சுயநல, மக்கள் விரோதக் கூட்டணியை மொத்தமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர வாக்களிப்போம். இவ்வாறு அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.