மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினால் நாட்டில் சுமார் 1.3 கோடி இளைஞர்கள் பலன் அடைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மகாராஷ்டிராவில் மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் பெயரில் 511 ஊரக திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 19) காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் மகாராஷ்டிராவின் 34 ஊரக மாவட்டங்களில் இந்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதற்கு இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மாநிலங்கள் விரிவுபடுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் திறன் மேம்பாட்டு திட்டங்களை வடிவமைப்பதிலும் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
தொழில் துறையில் முற்றிலும் குறைபாடு இல்லாத பொருட்களை தயாரிப்பது எந்தப் பொருளை உற்பத்தி செய்தால் இந்தியா தன்னிறைவு பெறும் என்பதை அறிவது ஆகியற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு பற்றிய தொலைநோக்கு பார்வையோ தீவிர அக்கறையோ முந்தைய அரசுகளுக்கு இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக தொழில்துறையில் திறன் வாய்ந்த இளைஞர்களுக்கான தேவை இருந்தபோதும் அத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போனது.
எனது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டங்களால் நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் பலன் அடைந்துள்ளனர். பழங்குடியினர், ஏழைகள், பட்டியிலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் இத்திட்டத்தின் உண்மையான பயனாளிகள் ஆவர். வேளாண் துறைக்கு புதிய திறன்கள் தேவைப்படுகின்றன.
இயற்கை வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், பண்ணை விளைபொருட்கள் பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் போன்றவற்றுக்கும் புதிய திறன்கள் தேவைப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.