நமது நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசு ஒரு எச்சரிக்கை குறுந்தகவலை, இன்று (அக்டோபர் 20) ஃபிளாஷ் மெசேஜாக செல்போன் பயனாளர்களுக்கு அனுப்பி வருகிறது. இதனை பார்ப்பவர்களுக்கு திடீரென்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் அவை மத்திய அரசின் சோதனை முயற்சி என கூறப்பட்டுள்ளது. இதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளத் தேவையில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை செய்தியை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து, இப்படிச் செய்தி மற்றவர்களுக்கும் வந்துள்ளதா எனக் கேட்டுள்ளனர். பலரும் தங்களுக்கும் செய்தி வந்தது என பதிலளித்த நிலையில், மோடி அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பேரிடர் மற்றும் அவசர நிலை காலங்களில் இந்த எச்சரிக்கை குறுந்தகவல் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.