இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்வதற்கு இனிமேல் விசா தேவையில்லை என்ற புதிய அறிவிப்பை இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு விசா தேவையில்லை என்ற தீர்மானத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி நேற்று (அக்டோபர் 23) தெரிவித்தார்.
இந்த திட்டம் அடுத்த ஆண்டு 2024 மார்ச் 31 ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியின் அடிப்படையில், இந்த ஏழு நாடுகளுக்கும் நிரந்தரமாக விசா தேவையில்லை என்ற அறிவிப்பை தெரிவிக்கவுள்ளது.
இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருவாய் பெருக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று இலங்கை சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, ரணில் விக்ரமசிங்க இந்தியா வந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான மிக நீண்ட நெடிய நட்புறவை புதுப்பிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொண்டு பயன்பெறும் வகையிலும் இந்தப் பயணம் அமைந்தது.
இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் கோத்தய ராஜபட்ச தலைமையிலான அரசு அகற்றப்பட்டது. அதன் பிறகு ரணில் தலைமையில் புதிய அரசு அமைந்தது. அதிபரான பிறகு ரணில் இந்தியா வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அதிக அளவில் உதவிகளை அளித்து வருகிறது.
சமீபத்தில் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதனால் இரு நாடுகளிலும் சுற்றுலாத்துறை மேம்பட்டு அதன் மூலம் வருவாய் அதிகரிக்கும் என பிரதமர் கூறியிருந்தார். அதன் ஒரு பகுதியாக இந்தியாவை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பை அந்த நாடு தற்போது அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.