சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் கையெழுத்து போட வேண்டும் என வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜாவின் மகனும், திமுகவின் எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்டது. எனவே அதனை ரத்து செய்வதாக தமிழகத்தில் திமுக மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் மாணவர்களிடம் பொய் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதியும் தினம் ஒரு பொய்யை சொல்லிக்கொண்டு வருகின்றனர். தங்கள் துர்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் 50 லட்சம் கையெழுத்து போடுங்கள் என சமீபத்தில் ஆரம்பித்து வைத்தனர்.
அதன்படி விருகம்பாக்கம் அரசுப்பள்ளிக்கு சென்ற திமுக எம்.எல்.ஏ., பிரபாகரன் அங்கிருந்த மாணவிகளிடம் பேசும்போது; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு படிப்பதற்கு சிரமமாக உள்ளது. தற்போது திமுக நீட் தேர்வை ரத்து செய்வதற்கு 50 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளோம். அதில் நீங்கள் கையெழுத்து போடுங்கள் என்று கூறுகிறார். அதற்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரும் அரசியல்வாதி போன்று பேசுகிறார். உதயநிதி ஸ்டாலின் அய்யா கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளார். அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீட் எதிர்க்கிறோம் என விருகம்பாக்கம் திமுக எம்.எல்.ஏ., பிரபாகரன் வலுக்கட்டாயமாக அரசுப் பள்ளி மாணவிகளிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். இந்த செயலுக்கு அவர் வெட்கப்பட வேண்டும். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரும் உடந்தையாக உள்ளார். உங்களின் மலிவான அரசியலுக்கு பள்ளி குழந்தைகளின் மனதை மாசுப்படுத்துவதா? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.