தமிழகம் வந்த பாஜக ஆய்வுக்குழுவினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். ஜனநாயக விரோதமாக பாஜகவினர் கைது செய்யப்படுவது குறித்து அந்த மனுவில் புகார் கூறப்பட்டுள்ளது.
விடியாத திமுக அரசால் தமிழக பாஜகவினர் எதிர்கொள்ளும் பிரச்னை பற்றி ஆராய கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி, எம்.பி.க்கள் சத்யபால் சிங், பிசி மோகன் உட்பட நான்கு பேர் அடங்கிய குழுவை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்திருந்தார். அதன்படி மேலிட குழு நேற்று (அக்டோபர் 27) சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தனர்.
அங்கு, திமுக அரசால் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளிடம் அவர்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டனர் என்பது உட்பட பல்வேறு விஷயங்களை கேட்டறிந்தனர். அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டிருந்தால், தலைமையில் இருந்து கட்டாயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியையும் அளித்தனர்.
இந்த நிலையில, மேலிட குழு இன்று (அக்டோபர் 28) காலை, மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, விளையாட்டுப்பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரின் வீடுகளுக்கு நேரில் சென்று குடும்பத்தாரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அதே போன்று பனையூரில் மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன், கொடி கம்பம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.
அதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு ஒன்றை வழங்கினர். அந்த மனுவில் தமிழகத்தில் அரசியல் ரீதியாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து டெல்லியில் பாஜக தலைமையிடம் விசாரணை நடத்தப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.