சேலம் விமான நிலையம் வந்த கோவா மாநில ஆளுநரை வரவேற்பதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவா மாநில ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை சென்னையிலிருந்து பயணிகள் விமானம் மூலம் நேற்று (அக்டோபர் 29) சேலம் வந்தார். அவரை வரவேற்று சேலம் நகருக்கு அழைத்துச் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி விஐபிக்கள் செல்லும் வாகனம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வாகனத்தில் ஆளுநர் ஏறி அமர்ந்தார். அப்போது காரில் தேசியக்கொடி கட்டப்படாததைக் கவனித்த ஆளுநரின் பாதுகாப்பு அலுவலர் அச்செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கர்நாடகாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த மற்றொரு வாகனத்திலும் தேசியக்கொடி கட்டப்படவில்லை. இதன் பின்னர் சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த காரில் காத்திருந்த ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, பத்து நிமிட தாமதத்துக்குப் பின்னர் சேலம் புறப்பட்டுச் சென்றார். அந்த வாகனத்திலும் தேசியக் கொடி கட்டப்படவில்லை.
இது பற்றி செய்தியாளார்களிடம் பாஜக சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவர் ஆர்.கோபிநாத் கூறியதாவது:
திமுக அரசு ஆளுநரை அவமதிக்கும் விதமாக இவ்வாறு செய்துள்ளது. ஆளுநருக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை; இதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். இந்தத் தவற்றுக்குக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆளுநர் சென்ற காரில் தேசியக்கொடி இல்லாமல் அழைத்து சென்றிருப்பது, தேசத்தை அவமானப்படுத்தியதற்கு சமம் என பொதுமக்கள் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.