தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த ஜோடியை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முருகேசன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகன் மாரிசெல்வம் 23, இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகா 23, என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டார் பெற்றோருக்கு தெரியவந்தது.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் மாரிச்செல்வம் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் என்பதால் கார்த்திகாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதல் ஜோடி கடந்த அக்டோபர் 30ம் தேதி கோவில்பட்டியில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். மாரி செல்வத்தின் காதல் திருமணத்தை அவரது வீட்டில் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதால் மாரிச்செல்வம், கார்த்திகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது நேற்று (நவம்பர் 2) மாலை 6 மணியளவில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து இருவரையும் சராமரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது. இது தொடர்பாக அப்பகுதியினர் தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திகா, மாரிச்செல்வம் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், ஆட்களை வைத்து இருவரையும் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதான தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே சாதியில் நடந்துள்ள இந்த கெளரவக் கொலை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய விடியாத திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.