திமுக ஆட்சியில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிரன வன்முறை வெளிப்படையாக நடைபெறுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப் பகுதியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மீது, ஜாதியைக் கேட்டு ஒரு கும்பல் கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தியதோடு, இருவரையும் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமையில் ஈடுபட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த மனிதத் தன்மையற்ற செயலில் ஈடுபட்டவர்களை, தமிழக பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என, பிறப்பால் அனைவரும் சமம் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த மண்ணில், தொடரும் இத்தகைய ஜாதி வெறிப் போக்கு, மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சமூகமாக, நாம் அனைவரும் பெரும் தவறு செய்து வருகிறோமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சமீப காலங்களில், இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் அதிகரித்து வருவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
கூர்ந்து கவனித்தோமானால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை வெளிப்படையாகவே நடந்து வருகிறது. அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் ஆட்சியிலும் முக்கியப் பொறுப்புக்களில் கட்சியிலும் இருப்பவர்கள், பட்டியல் சமூக மக்களை மரியாதை இல்லாமல் அவமதிக்கும் செய்திகளை அடிக்கடி நாம் காண நேர்கிறது.
ஆனால், தன் கட்சியினரைக் கண்டித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் இருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இவற்றைக் குறித்துப் பேசுவதையே தவிர்த்து வருகிறார். பல மாதங்கள் கடந்தும், வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. பொது மேடைகளிலும், கூட்டங்களிலும், அமைச்சர்களே, பட்டியல் சமூக மக்களை ஜாதியின் பெயரைச் சொல்லி அழைத்தும், தரக்குறைவாக நடத்தியும், முதலமைச்சர் மௌனமாகவே இருக்கிறார்.
பள்ளி மாணவர்கள் தொடங்கி, பஞ்சாயத்துத் தலைவர் வரை, பட்டியல் சமூக மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டும், முதலமைச்சர் ஸ்டாலின் எந்த வித நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. முதலமைச்சரின் இந்த செயலற்ற தன்மை, பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை, மறைமுகமாக ஊக்குவிப்பதாகவே இருக்கிறது.
குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தி, இந்த நிகழ்வுகளை பொதுமக்களின் கவனத்தில் இருந்து மறைக்க நினைக்கும் திமுகவின் இந்தப் போக்கு, மிக மோசமான முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது. தொடரும் இது போன்ற வன்கொடுமைச் சம்பவங்கள், இதனை உறுதிப்படுத்தவே செய்கின்றன.
பட்டியல் சமூக இளைஞர்கள், மக்கள், பெண்கள், மாணவர்கள் மேம்பாட்டுக்கென, மத்திய அரசு ஒதுக்கிய 10,000 கோடி நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவது, பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, விளம்பர அரசியலுக்குச் செலவிடுவது, பட்டியல் சமூக மாணவர்களுக்கான பள்ளிகள், விடுதிகள் போன்றவற்றை, அடிப்படை வசதிகள் கூடச் செய்து தராமல் வைத்திருப்பது, அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் தராமல் புறக்கணிப்பது என தொடர்ந்து பட்டியல் சமூக மக்களுக்கு விரோதமான செயல்களையே செய்து வரும் திமுக, கோபாலபுரக் காவலாளிகளாக இருக்கும் சிலரை முன்னிறுத்தி, போலி சமூகநீதி பேசி பொதுமக்களை ஏமாற்றுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
ஒரு பகுதியில், ஒரு சமூக மக்களுக்கு எதிராக மற்றொரு சமூகத்தைத் தூண்டி விட்டு, அதன் மூலம் தங்கள் கட்சிக்கான வாக்குகளை உறுதி செய்யும் கீழ்த்தரமான அரசியலை, தமிழகத்தில் தொடங்கி வைத்தது யார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
கட்சி தொடங்கி எழுபது ஆண்டுகள் கடந்தும், அதே கீழ்த்தர அரசியல் மூலம்தான் வாக்குகளைப் பெற முடியும் என்ற நிலையில் இன்னும் இருப்பது வெட்கக்கேடு.
ஜாதிய ரீதியிலான குற்றங்கள் நடக்காமல் தடுத்து நிறுத்துவதும், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் அரசின் கடமை. மாதம் ஒரு குற்றம் நடந்த பிறகு, கோபாலபுர அரசியல் வாரிசுகளில் ஒருவரை அனுப்பி வசனம் பேசி சமாளிப்பது, நிரந்தரத் தீர்வு தராது என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.