திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததற்காக, சட்ட விரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு இருமுறை மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட போது தனக்கு நெஞ்சுவலி வந்திருக்கிறது என செந்தில் பாலாஜி அழுது அடம் பிடித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன் பின்னர் ஒரு சில நாட்களில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சில வாரம் மருத்துவமனையில் இருந்த அவர் பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் பின்னர் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த அக்டோபர் 19-ல் உத்தரவிட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்காத நிலையில், அதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (நவம்பர் 20) உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்கு (நவம்பர் 28) உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில், செந்தில் பாலாஜியின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் உட்பட மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அமலாக்கத்துறை அதிகாரிகளும் பார்வையிட இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை பெண் அதிகாரியை திமுகவினர் கடுமையாக தாக்கினர். இது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெறமால் இருப்பதற்கே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை சார்பில் வலுவான ஆதாரங்களை முன்வைத்தாக சொல்லப்படுகிறது.
மருத்துவ உதவி தேவைப்பட்டால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கவும் தயாராக இருப்பதாக அமலாக்கத்துறை கூறுவதாக சொல்லப்படுகிறது. வருகின்ற காலங்களிலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் நிராகரிக்கவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. அமைச்சர் என்ற அதிகாரமிக்க பதவியை இன்றும் அவர் சிறையில் இருந்தாலும் வகித்து வருகிறார். எனவே இதனைக் கொண்டு ஆதாரங்களை கலைக்க செந்தில் பாலாஜி முற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதே அமலாக்க துறையின் வாதம்!