எங்க அரசாங்கத்தில் மண் அள்ள எங்களுக்கு உரிமை இல்லை என திமுக பிரமுகர் ஒருவர் வி.ஏ.ஓ.வை கண்டு ஓட்டம் பிடிக்கும் முன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே பெருங்களுர் மங்களத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் முத்து என்பவர் ஜே.சி.பி., வாகனங்கள் மூலம் டிப்பர் லாரிகளில் செம்மண்களை ஏற்றிச்சென்று விற்பனை செய்து வந்துள்ளார்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வி.ஏ.ஓ., மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பெருங்களுர் வி.ஏ.ஓ., ரமேஷ் திடீரென்று மங்கலத்துப்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் புகார் கூறிய இடத்திற்கு ஆய்வு செய்ய சென்றபோது வி.ஏ.ஓ.,வை பார்த்ததும் திமுக பிரமுகர் முத்து அரசாங்கமே எங்களோடது தான். எங்க அரசாங்கத்துல அரசு இடம் எங்களோடது தான். இதுல மண்ணு கூட அடிக்க உரிமை இல்லையா என்று கூறியபடியே ஜே.சி.பி.,யையும் டிப்பர் லாரியையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.