கேள்வி கேட்க லஞ்சம்: திரிணாமுல் எம்.பி., மஹூவா மொய்த்ரா பதவி அதிரடி பறிப்பு!

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கியதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா, எம்.பி., பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

மஹூவா மொய்த்ராவை எம்.பி., பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் லோக்சபாவில் இன்று (டிசம்பர் 8) அதிரடியாக நிறைவேறியது. இதனையடுத்து மஹூவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி எம்.பி., வினோத் குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு அல்லது நன்னடத்தை குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் கடந்த மாதம் அறிக்கையை நன்னடத்தைக் குழு வெளியிட்டிருந்தது.

மஹூவா மொய்த்ரா மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கையில் அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. நன்னடத்தை குழுவில் இதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டது.

இந்த நிலையில், மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையை இன்று கடும் அமளிக்கு இடையே லோக்சபாவில் நன்னடத்தை குழு தலைவர் வினோத் குமார் சோன்கர் தாக்கல் செய்தார். அப்போது இப்பரிந்துரை அறிக்கை மீது விரிவான விவாதம் நடத்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., டேனிஷ் அலி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதேபோல லோக்சபாவில் எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் பலரும் மஹூவா மொய்த்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் லோக்சபாவில் கடும் அமளி நீடித்தது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

அப்போது சபையில் இருந்து வெளியே வந்த மஹூவா மொய்த்ரா பரிந்துரை அறிக்கை இன்னமும் வரவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பின் லோக்சபாவுக்கு மீண்டும் வருவேன். என்ன நடக்கிறது என்பதை பகல் 2 மணிக்கு பின்னர் பார்க்கலாம் என்றார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியது. அப்போது மஹூவா மொய்த்ராவுக்கு எதிரான அறிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் முடிவில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா கொண்டு வந்தார். எதிர்க்கட்சி எம்பிக்களின் எதிர்ப்புக்கு இடையே மஹூவா மொய்த்ராவின் எம்.பி, பதவியை பறிக்கும் தீர்மானம் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது.

மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு நாடாளுமன்றத்திற்கு பேசவா மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள். எனவே மொய்த்ரா போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்க மாட்டார்கள். மொய்த்ராவின் எம்.பி., பதவியை பறிப்பது மட்டுமின்றி அவர் நிரந்தரமாக தேர்தலில் போட்டியிடாதபடி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக  உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top