சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மசூத், சவுமியா தம்பதியின் இறந்த குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகம் வெள்ளை துணியை கூட போர்த்தாமல் அட்டை பெட்டியில் வைத்து கொடுத்துள்ளது.
வடசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத் என்பவரின் மனைவி சௌமியாவிற்கு கடந்த 5ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்போது மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வீட்டை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்ததால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் அழைத்துவர முடியாமல் மசூத் குடும்பத்தினர் தவித்து வந்துள்ளனர்.
இதனால் தங்களிடம் இருந்த சைக்கிள் ரிக்ஷாவிலேயே வெள்ளத்தில் சவுமியாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் உடனே சேர்க்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். ஒரு கட்டத்திற்கு பின்னர் பிரசவ அறைக்கு அழைத்துச்சென்ற சவுமியாவிற்கு பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது.
இதனால் அவரின் குடும்பத்தார் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டனர். பிறந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்கு ரூ.2,500 தர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் மசூத்திடம் கூறியுள்ளது. இதனால் கையில் பணம் இல்லாததால் குழந்தையின் உடலை வாங்காமல் இருந்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று (டிசம்பர் 10) நான்கு நாட்களுக்குப் பிறகு இறந்த பெண் குழந்தையின் உடலை உரிய முறையில் வெள்ளைத் துணியால் கூட போர்த்தாமல் மருத்துவமனை நிர்வாகம் ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்துள்ளது. அப்போது உடலை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்யும் இடத்திற்கு வந்த பிறகு இதை அறிந்தவர்கள் அதிர்ந்துள்ளனர்.
திராவிட மாடல் அரசு என தன்னைத்தானே மார்த்தட்டிக்கொள்ளும் ஸ்டாலின் லட்சணம் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. விரைவில் இதுபோன்ற ஆட்சியை மக்கள் விரட்டி அடிப்பார்கள்.