சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய முதல்வராக பழங்குடியின தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ‘விஷ்ணு தியோ சாய்’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 54 இடங்களில் பா.ஜ.க., அபார வெற்றி பெற்றது. இதன் பின்னர் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஒரு வாரமாக பேசப்பட்டு வந்த நிலையில், பா.ஜ.க., எம்.எல்.ஏ.க்களின் முக்கியக் கூட்டம் ராய்ப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விஷ்ணு தியோ சாயை முதல்வராக தேர்ந்தெடுக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், பழங்குடி மக்கள் அதிகம் உள்ள மாநிலத்தில், பழங்குடியினத்தைத் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் குங்குரி தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணு தியோ சாய், 87,604 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 59 வயதாகும் விஷ்ணு தியோ, பா.ஜ.க.வின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மிகவும் விரும்பப்படுபவர்.
பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் எஃகு துறை இணை அமைச்சாராகவும், 16வது மக்களவையில் சத்தீஸ்கரின் ராய்கர் தொகுதி எம்.பி.யாகவும் பணியாற்றியவர். கடந்த 2020 – 2023-ல் சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராகவும் விஷ்ணு தியோ சாய் பணியாற்றினார்.
முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி விஷ்ணு தியோ சாய் கூறுகையில், “பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்மீது நம்பிக்கை வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் மோடியின் வாக்குறுதியின் கீழ் சத்திஸ்கர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக முழுமனதுடன் பாடுபடுவேன். மாநிலத்தின் முதல்வராக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பாடுபடுவோம். மக்களுக்கு 18 லட்சம் வீடுகள் வழங்குவதுதான் முதல் வேலை” என்று தெரிவித்தார்.
நடந்து முடிந்த சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 54 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதனையடுத்து மாநிலத்தில் புதிய முகத்தை முதல்வராக்க தேசிய தலைமை விரும்பியது.
மூன்று மாநில முதல்வர்களைத் தேர்ந்தெடுப்பதில் கட்சி, சமூக, பிராந்திய நலன்களைக் கவனத்தில் கொள்வதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, சர்பானந்த சோனோவால் மற்றும் துஷ்யந்த கவுதம் ஆகியோரை மத்திய பார்வையாளர்களாக தேசிய தலைமை கடந்த 8ம் தேதி நியமித்ததது. இவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்துக்குப் பயணம் செய்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களின் கூட்டங்களை மேற்பார்வையிடுவார்கள் என்று கூறப்பட்டது.
அதன்படி சத்தீஸ்கர் மாநில பார்வையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) ராய்பூர் வந்து பா.ஜ.க.வின் புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு வாரம் ஆகியும் இன்னும் ஏன் பா.ஜ.க.,வில் முதல்வரை தேர்வு செய்யவில்லை என்று பேசி வந்த நிலையில், பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவரின் முகத்திலும் பா.ஜ.க., கரியை பூசியுள்ளது.