நீதிமன்றமும் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமும்…

கம்யூனிஸ்டாக இருந்த மோகன் குமாரமங்கலம் – காங்கிரசுக்குள் ஊடுருவினார். 

கம்யூனிஸ்ட் தலைவர் மோஹித் சென் அந்தக் காலத்தில் “ஊடுருவல் தந்திரம்” என்றே (INFILTRATION STRATEGY) என்றே ஒரு கோட்பாட்டைப் புகுத்தினார்.  

காங்கிரஸ் பிளவுபடுவதற்கு சற்று முந்திய காலம் அது! 

பிறகு காங்கிரஸ் பிளவு பட்டு – இந்திரா காந்தியும் தனக்கு ஒரு “சோஷலிஸ்ட் புரட்சியாளர்” இமேஜை உருவாக்கிக் கொள்வதில் மும்முரமாக இருந்தார். 

காங்கிரஸ் பிளவுக்கு முன்பே -அந்த சமயத்தில் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் சிந்தனையாளரும், மார்க்சீய தத்துவ அறிஞரும், குமாரமங்கலம் ஜமீன், சென்னை ராஜதானியின் முன்னாள் “ப்ரீமியர்” டாக்டர் சுப்பராயனின் மகன் என்ற பாரம்பரியமிக்க பலமான குடும்பப் பின்னணி கொண்ட மோகன் குமாரமங்கலத்தின் வருகை காங்கிரசுக்குள் மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்பட்டது! 

மொரார்ஜி தேசாய், சம்பூர்ணானந்த், நிஜலிங்கப்பா, சஞ்ஜீவ ரெட்டி, சி.சுப்ரமணியம் போன்ற “வலது சாரி” சிந்தனையாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் காங்கிரசை ஒரு திசையில் இழுக்க – இவர்கள் நேருவியன் மாடல் சோஷலிச எதிர்ப்பாளர்களும் கூட – அவர்களுக்கு எதிராக காங்கிரசை “இடது சாரி” பக்கம் இழுக்க மோகன் குமாரமங்கலம் மிகப் பெரிய சக்தியாகப் பார்க்கப்பட்டார். 

அவர் மட்டுமல்ல – காங்கிரஸ் கட்சிக்குள் “இளம் துருக்கியர்”  (YOUNG TURKS) என்று அழைக்கப்பட்ட சோஷலிஸ்ட் சிந்தனை கொண்ட சந்திரசேகர், மோகன் தாரியா, நந்தினி சத்பதி (பின்னாளில் ஒரிசா முதல்வர்) போன்றவர்களுக்கும் மோகன் குமாரமங்கலத்தின் வருகை பெரும் பலத்தை கூட்டியது. 

காங்கிரஸ் பிளவு பட்டு – பழமை வாதிகள், வலது சாரிகள் என்று அறியப்பட்ட மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, சஞ்ஜீவ ரெட்டி போன்றோர் “சிண்டிகேட்” காங்கிரஸ் என்று ஆகிப்போனார்கள். அவர்கள் நேருவியன் சோஷலிசத்தின் விமர்சகர்களும் கூட! (அந்தக் குழுவில் நேருவின் தீவிர ஆதரவாளரான காமராஜ் இருந்தது வியப்பான முரண்பாடு). 

அதேபோல் பக்கா ராஜாஜி சீடர் – தனியார் மய ஆதரவாளர் சி.சுப்ரமணியம் இந்திரா கோஷ்டியோடு நின்றதும் வியப்பான முரண்பாடு! 

ஆக பிளவுண்ட காங்கிரசில் இந்திரா காந்தி தலைமைக்கு – “முற்போக்கு” – “சோஷலிஸ்ட்”- “புரட்சி” பிம்பங்கள் தேவைப்பட்டன. 

அதை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தவர் மோகன் குமாரமங்கலம். 

அவற்றில் மிக முக்கிய முடிவுகள் இரண்டு: 

1) ராஜ மான்ய ஒழிப்பு 

2) வங்கிகள் தேசிய மயம். 

இந்திய ராஜ சமஸ்தானங்களை வல்லபாய் படேல் இந்தியாவோடு இணைத்தபோது – அந்த மன்னர்களுக்கு கொடுத்த வாக்குறுதி – அவர்களுடைய வம்சத்தினருக்கு “ராஜ மான்யம்” (PRIVY PURSE) வழங்கப்படும் என்ற வாக்குறுதி மீறப்படுவதாக சில சுதேசி சமஸ்தான வாரிசுகள் வழக்குத் தொடர்ந்தனர். 

அதேபோல் ஒரு தேசியமயமாக்கப்பட்ட சில முன்னாள் தனியார் வங்கி டைரக்டர்களும் – வழக்குப் போட்டனர். 

** இரண்டிலுமே தீர்ப்பு அரசாங்கத்துக்கு எதிராக வந்தது! அதாவது பாராளுமன்றத்தில் கொண்டு வந்த மசோதா செல்லாது என்று தீர்ப்பு வந்தது** 

பார்த்தார் இந்திரா காந்தி! 

தனது புதிய “இடது சாரி” சகாக்களுடன் யோசித்தார். 

அவர்கள் – குறிப்பாக மோகன் குமாரமங்கலம் – உருவாக்கிய கோட்பாடுதான் “COMMITTED JUDICIARY”! 

அதாவது அரசு எந்த மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வருகிறதோ அதற்கு “இசைவாக” நீதி மன்றங்களும் செயல்பட வேண்டும்! 

அதுதான் புரட்சி! அதுதான் முற்போக்கு! 

“சோஷலிச லட்சியங்களுக்கு” எதிராக நீதி மன்றங்கள் தீர்ப்பு தரக் கூடாது! 

ஒரு மக்கள் நல அரசு (WELFARE STATE) கொண்டு வரும் திட்டங்களுக்கு “இசைவாக” நீதி மன்றம் செயல்பட வேண்டும்! 

இதுதான் மோகன் குமாரமங்கலம் அறிமுகப்படுத்திய COMMITTED JUDICIARY தத்துவம்! 

அதற்கு மாறாக – நீதித் துறை என்பது சுதந்திரமானது ஆயிற்றே? INDEPENDENCE OF JUDICIARY என்பார்களே? – இப்படி எல்லாம் அங்கலாய்த்தவர்கள் கால மாற்றத்தை ஏற்காத பத்தாம் பசலிகள், பழைமை வாதிகள், பிற்போக்காளர்கள் என்று பழிக்கப் பட்டனர். 

அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் கொண்டு வரும் எந்த சட்டமும் – ஜனநாயகப் பண்பு நிறைந்தது – அதை மறுத்து எதிராக வழங்கப்படும் எந்தத் தீர்ப்பும் மக்கள் விரோத பிற்போக்கு சிந்தனை கொண்டது! 

இதுவே அப்போது 1967 க்குப் பிந்தைய கால கட்டங்களில் COMMITTED JUDICIARY என்று கம்யூனிஸ்டுகளும், இந்திரா காந்தி தலைமையான காங்கிரசாரும், 

இதைப் பற்றி எல்லாம் ஆழமான சட்ட ஞானம் இல்லாவிட்டாலும் திராவிட மாடல்களும்… 

கூரை மீது ஏறி நின்று குரல் கொடுத்த COMMITTED JUDICIARY தத்துவம். 

இதன்படிதான் மோகன் குமாரமங்கலத்தின் தாக்கத்தில் இந்திரா காந்தி “அரசாங்கத்துக்கு இசைவாக” தீர்ப்பு வழங்கக் கூடிய ஏ.என்.ரேவை தலைமை நீதிபதி ஆக்கினார் – COMMITTED JUDICIARY வேண்டும் என்பதற்காக! 

ரேவை விட மூத்த 3 சீனியர் நீதிபதிகள் – ஹெக்டே, குரோவர், ஷீலத் ஆகியோரின் சீனியாரிட்டியை புறக்கணித்து ஏ.என்.ரே  வை தலைமை நீதிபதி ஆக்கினார் இந்திரா காந்தி! 

அந்த 3 சீனியர் நீதிபதிகளும் ராஜினாமா செய்தனர். 

அப்போதெல்லாம் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் அனைத்தையும் விழுந்து விழுந்து ஆதரித்தவர்கள் கம்யூனிஸ்டுகளும், கழகத்தவர்களும்! 

COMMITTED JUDICIARY… 

அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றமே பரமாதிகாரம் பெற்ற அமைப்பு! 

அந்தப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமே மாட்சிமை மிக்கது – அது மக்களாட்சித் தத்துவத்தின் புனித முத்திரை பெற்ற சட்டம்! 

அதை ஒரு நீதிமன்றம் விமர்சிப்பதாவது? எதிர்ப்பதாவது? 

COMMITTED JUDICIARY வேண்டும்! 

அதே, அதே… பாராளுமன்றத்தில், மக்களாட்சி தத்துவத்தின் கோயிலாக விளங்கும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் ஆர்டிகிள்  370 ஒழிப்பும் லடாக் பகுதி பிரிப்பும்! 

அதைத்தான் நீதிமன்றமும் ஏற்று தீர்ப்பாக வழங்கி உள்ளது!

மதிக்க வேண்டும் முற்போக்குகளே…! 

முரளி சீதாராமன்.!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top