குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 16ம் தேதி முதல் மூன்று நாட்கள் கனமழை பெய்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்கள் வெள்ளக்காடானது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. பல குக்கிராமங்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் காணும் பணி தொடர்கிறது. தற்போது வெள்ளம் ஒரு சில இடங்களில் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.
இதில் நெல்லை ரயில் நிலையத்தை சுற்றி முழுவதுமாக வெள்ளநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அங்கு ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு மழை வெள்ளத்தை அகற்றியது. இதனால் மீண்டும் ரயில் நிலையம் இன்று (டிசம்பர் 20) முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
அதன்படி வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட சில ரயில் சேவைகளை தவிர மற்ற ரயில் போக்குவரத்து படிப்படியாக தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் திமுக அரசு சாலைகளை கூட தரமாக போடாததால் பல்வேறு இடங்களில் வெள்ளத்தால் சாலைகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ரயில் பயணங்களையே அதிகமாக விரும்புகின்றனர். பேரிடர் காலங்களிலும் துரிதமாக செயல்பட தொடங்கிய ரயில்வேத்துறைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.