நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பிகள் நேற்று (டிசம்பர் 19) போராட்டம் நடத்துவதாக கூறி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்து கொண்டிருந்தார். அதனை மற்ற எம்.பி.க்களுடன் ராகுல் கைத்தட்டியும், செல்போனில் வீடியோ எடுத்தும் ரசித்துக் கொண்டிருந்தார். இந்த செயலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில்;
எதிர்கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த சில நாட்களாக, பாராளுமன்ற மரபுகளை மீறியும் பொதுமக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறந்தும், அரசியல் சாசன பதவியில் உள்ளவர்களிடம் அவமரியாதையாக நடந்து வந்ததையும் நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த தவறான நடத்தையை இன்னும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பது பாராளுமன்றத்திற்கு மட்டுமின்றி மக்கள் மன்றத்திற்கும் அவமானமாகும்.
மரியாதைக்குரிய துணை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அவர்களையும், தூற்றியும், அவமரியாதையும் செய்த ராகுல் காந்தி மற்றும் அவருக்கு துணை நின்ற இதர எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து நாளை (21.12.2023) வியாழக்கிழமை அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும்.
அரசியல் சாசன அமைப்புகள் இயங்க முடியாமல் முடங்கியவர்களுக்கு எதிராக நமது கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.