தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையும் அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தாலும் பொதுமக்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டனர். தற்போது மழை மட்டுமே ஓய்ந்துள்ளது ஆனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எதுவுமே கிடைக்கவில்லை என விடியாத அரசை எதிர்த்து மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தென்மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழையால் ஏரி, குளம், குட்டை, அணைகள் என அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் மிகப்பெரிய பாதிப்பை மக்கள் சந்தித்துள்ளனர். பல இடங்களில் நீர் நிலையங்களில் ஏற்பட்ட உடைப்புகள் கிராமங்களையே மூழ்கடித்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 93 சென்டி மீட்டர் மழை பதிவானது. ஆற்று நீருடன் மழைநீரும் சேர்ந்துகொண்டதால், தூத்துக்குடி மாவட்டமே வெள்ளத்தில் தத்தளித்தது, இன்று தத்தளித்து வருகிறது.
எங்கு பார்த்தாலும் தண்ணீராகக் காட்சியளித்தது. குடியிருப்புகளில் தண்ணீர் வந்ததால், மக்கள் திண்டாடினார்கள். விடியாத அரசு பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பலர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். அது பற்றிய உண்மையான எண்ணிக்கை இன்னமும் வெளியாகவில்லை. அது மட்டுமின்றி போதுமான நிவாரண முகாம்கள் கூட அமைக்கப்படவில்லை.
மேலும், வெள்ளம் காரணமாக சாலைகளில் உடைப்பு ஏற்பட்டதால் நெல்லை~தூத்துக்குடி மற்றும் நெல்லை~திருச்செந்தூர் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரயில்வே தண்டவாளங்களையும் வெள்ளநீர் சூழ்ந்ததால், ரயில்வே போக்குவரத்தும் தடைபட்டது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
அதோடு மின்கம்பங்களும் சாய்ந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டதால் அவசரத் தேவைக்காக மக்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முடியாத சூழல் உருவானது.
கனமழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளமும் ஓய்ந்த பின்னரும் மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. தற்போது வரையில் விமானப்படை, கப்பற்படை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறது. அதே போல பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி பா.ஜ.கவின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், போர்வை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
ஆனால் பல்வேறு இடங்களில் மாநில அரசின் எந்த உதவியும் கிடைக்காமல் மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். அதோடு ஐந்து நாட்களாகியும் பல இடங்களில் இன்னும் இயல்புநிலை திரும்ப விடியாத அரசு நடவடிக்கை எடுக்காததால் தூத்துக்குடி நகரில் மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சென்று சந்திப்பதைத் தடுத்து அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வருகின்றனர் ஆளும் கட்சியினர். அதன்படி போலீஸாரும், வருவாய்த்துறையினரும் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக தூத்துக்குடி-நெல்லை சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையம் நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் விடியாத அரசு அதனை கண்டுக்கொள்ளாமல் மக்களை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்திவிட்டது. அதிலும் மழை வெள்ளத்தால் தத்தளித்த மக்களுக்கான அடிப்படை உதவிகளை கூட செய்யாமல் முதல்வர் ஸ்டாலின் இ.ண்.டி. கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மனசாட்சி இல்லாமல் டெல்லி சென்றுவிட்டார். மழை ஓய்ந்த பின்னர் சில இடங்களில் சென்று போட்டோ ஷூட் நடத்தி ஆறுதல் கூறினால் போதும் என ஸ்டாலின் எண்ணுகிறார். இந்த நாடகம் இனி எடுபடாது என எச்சரிக்கிறார்கள் மக்கள்.