இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்குவதாக மத்திய அரசு நேற்று (டிசம்பர் 20) அறிவித்தது. இந்த விருதை பெற உள்ள வைஷலாலிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் அடங்கிய 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் நேற்று (டிசம்பர் 20) மத்திய அரசு அறிவித்தது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சார்யா, தயான் சந்த் உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரும் தமிழகத்தை சேர்ந்தவருமான வைஷாலி, இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி, உட்பட 26 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுவதாக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் 2ஆவது மிகப்பெரிய விருது ஆகும்.
வைஷாலியின் சகோதரரும், இந்தியாவின் சிறந்த செஸ் வீரருமான பிரக்யானந்தாவுக்கு கடந்த ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு வைஷாலிக்கு அர்ஜூனா விருதும், அவரது பயிற்சியாளர் பி.ஆர். ரமேஷூக்கு துரோணாச்சார்யா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் ஜனவரி 9ஆம் தேதி வழங்க உள்ளார்.
விருது பெரும் வைஷாலிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் பெருமை கிராண்ட் மாஸ்டர் செல்வி வைஷாலிக்கு பாஜக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள். விளையாட்டுத் துறையில் இரண்டாவது மிக உயர்ந்த விருதான அர்ஜுனா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வைஷாலி சதுரங்க வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வார் என குறிப்பிட்டுள்ளார்.