இலங்கைக்கு கடத்துவதற்காக சென்னை பெரம்பூரில் காலி பெயின்ட் டப்பாக்களில் வைத்து புதர் மண்டிய இடத்தில் புதைத்து வைத்திருந்த சுமார் ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை நாட்டை சேர்ந்த சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர் உதயகுமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பதுங்கியிருப்பதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் உதயகுமாரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அறையில் இரண்டு கிலோ ‘மெத்தாம்பெட்டமைன்’ என்ற போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் தொடர் விசாரணை நடத்தியதில், சென்னையில் இந்தோ, இலங்கை போதைப் பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவது தெரியவந்தது. இந்த கும்பல் மியான்மர் நாட்டிற்கு அருகாமையில் மணிப்பூர் மாநிலத்தின் மோரே என்ற கிராமத்தில் இருந்து சென்னை வழியாக விமானத்தில் போதைப் பொருள் கடத்துவதும் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் உதயகுமாரின் நண்பரும் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவருமான பெரம்பூரைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்த போது அதே பகுதியில், புதர் மண்டிய பகுதியில் காலி பெயின்ட் டப்பாக்களில் 52 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதை பொருளை புதைத்து வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 54 கிலோ போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் வரும் என கூறப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தும் கும்பல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தாமல் முதல்வர் ஸ்டாலின் வெறும் போட்டோ ஷூட் மட்டுமே நடத்தி ஆட்சியை நடத்திவிடலாம் என நினைக்கிறாரோ என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
நேற்று (டிசம்பர் 22) திருவாரூர் மாவட்ட திமுக நிர்வாகி மகன் போதைப் பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.