கனமழையாலும், வெள்ளத்தாலும் மிக கடுமையான பாதிப்புகளை தென்மாவட்டங்கள் சந்தித்துள்ளது. அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தமிழக பாஜக இளைஞர் அணியினருக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது;
கனமழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில், தமிழக பாஜக சகோதர சகோதரிகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில், பொதுமக்களுக்கு உறுதுணையாகச் செயலாற்றி வருவது பெருமையளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி முகத்துவாரத்தில் அமைந்துள்ள புன்னக்காயல் மற்றும் சுற்றியுள்ள கடலோரக் கிராமங்கள் வெள்ளப் பாதிப்புக்குள்ளானதை அறிந்து, கடல் மார்க்கமாக அந்தப் பகுதிகளுக்குச் சென்று, பொதுமக்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கியுள்ள தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் சகோதரர் ரமேஷ் சிவா மற்றும் இளைஞரணி சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும், எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் போது பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் இரவு, பகலாக நிவாரணப் பொருட்கள் வழங்குவது, மழையால் பாதித்தவர்களை படகுகள் மூலம் மீட்பது போன்ற பணிகளை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.