தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், கள்ளபிரான் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து சுவாமி தரிசனம் முடித்து விட்டு கோயில் வளாகம் வரும் போது பக்தர் ஒருவர் அமைச்சரிடம், கோயிலில் வெளிப்படையாகவும், சுகாதாரம் இல்லாமலும் கழிப்பறை உள்ளது. ஆகவே சுத்தம் செய்து அருகே கழிப்பறை கட்டடம் கட்டியும், தற்போது உள்ள அந்த பொது வெளிக்கழிப்பறையை யாரும் உபயோகப்படுத்தாத வண்ணம் செய்ய வேண்டும். அதன் வழியாக பக்தர்கள் கடந்து செல்லும் போது மிக கடினமாக உள்ளது என்றார்.
அதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரிகள் இதனை செய்கிறார்களோ இல்லையோ தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு மாதம் கழித்து இந்த பகுதியை வந்து பார்ப்பார். அப்போது இந்த பணி முடியவில்லை என்றால் நான் வருகிறேன். அந்த கட்டடம் கட்டுகின்ற வரை அந்த இடத்திலேயே நிற்பேன். அந்த பணி முடியும் வரை என தெரிவித்தார்.
அதற்கு, அதிகாரி உடனடியாக நான் செய்து தருகிறேன் எனக் கூறினார். அப்போது கோயில் பூசாரி ஒருவர், அந்த திறந்த வெளிக் கழிப்பறை வழியாக தான் பெருமாள் வருவார் என கூறும் போது, அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனால் தான் கழிப்பறையை சுத்தம் செய்யாமல் உபயோகப்படுத்துகிறார்களா? என அறநிலையத்துறை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார்.
பெருமாள் ஊர்வலம் வரும் போது, அந்த கழிப்பறை நீரைக் கடந்து தான் பொதுமக்களும் வருகிறார்கள். ஆகவே, அந்த பொது வெளிக் கழிப்பறையை சுத்தமாக தயார் செய்யுங்கள் என உத்தரவிட்டார்.
அப்போது, தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த கட்டடம் கட்ட நிதி எவ்வளவு ஆகும் என்று கேட்கபோது, உடனடியாக, அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீங்கள் ஏன் அதனை பற்றி கவலைப்படுகிறீர்கள். கோயிலில் பூசாரிகளுக்கு 3 ஆயிரம் கொடுப்பதற்கே ரேஷன் கடையில் அளந்து பார்த்து கொடுப்பவர்கள் பணம் நிறைய மீதி இருக்கும். பூசாரிகளுக்கு தான் சம்பளம் கொடுக்க முடியாது. ஏன் என்றால் அதற்கு ஒரு காரணம் உள்ளது. ஆனால் தெருப்பகுதியை சீரமைக்க கஷ்டம் இருக்காது. ஆகவே, அதனைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்றும், நயினார் நாகேந்திரன் நீங்கள் பெருமையாக சிஎஸ்ஆர் பணம் ஒதுக்குவேன் என்பீர்கள். அதற்கு வழி இல்லை. ஆகவே தமிழக அரசு அதிகாரிகளிடம் இருக்கும் பணத்தை வைத்து கட்டுவார்கள் என தெரிவித்தார். அது போன்று கழிப்பறையை கட்டாமல் இருந்தால் நானே நேரில் மீண்டும் வந்து கட்டி முடிக்கும் வரை இங்கேயே இருப்பேன் என பேசினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திமுக அரசின் ஹிந்து அறநிலையத்துறையை வெளுத்து வாங்கிவிட்டார் என பலர் சமூக வலைத்தளங்களில் கமெண்ட்கள் பதிவிட்டு வருகின்றனர்.