மாநிலத்தின் ஆட்சி துவங்கி, மேயர் வரை ஒட்டுமொத்தமாக கெடுத்து இன்று தமிழகத்தை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர் என மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க., செயல்வீரர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 12) தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “இந்திய வானிலை ஆய்வு மையம், மழை மற்றும் கனமழைக்கான முன்னறிவிப்புகளை வழங்குகிறது. மஞ்சள் எச்சரிக்கை எப்படி சிவப்பு எச்சரிக்கையாக மாறுகிறது என்பதை இங்கு உள்ளவர்களுக்கு படிக்கத் தெரியவில்லை. அடிப்படை விஷயத்தை படிக்கத் தெரியவில்லை. அதை விவரிக்கத் தெரியவில்லை. ஒரு கமாண்டன்ட் ஜெனரல் ஏதாவது ஓர் அறிவிப்புக் கொடுத்தால், அதைக் கேட்டு கிரகித்து கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கான திறமை இல்லை.
முதல்வர் ஸ்டாலினுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு 4 விஷயங்களைக் கூறினால், அதைக் கேட்டு கிரகித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும் திறமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனவே, குடும்ப ஆட்சி என்பது தமிழகத்தை மொத்தமாக சீரழித்துள்ளது. சிஸ்டம் முழுவதும் கெட்டுப்போய் உள்ளது. மாநிலத்தின் ஆட்சி துவங்கி, மேயர் வரை ஒட்டுமொத்தமாக சிஸ்டத்தைக் கெடுத்து இன்று தமிழகத்தை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர்.
இந்தியாவின் மிக முக்கியமான நகரமான சென்னை, நம் கண்முன்னே அழிகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தல் சென்னை நகரை மாற்றக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும்.
பா.ஜ.க., அமைச்சரவையில் உள்ள 75 பேர் மக்கள் பணி ஆற்றக்கூடியவர்கள். ஆனால் ஸ்டாலினின் அமைச்சரவையில் வேலை செய்யக்கூடிய தகுதியும், திறமையும் அற்றவர்களாகவே உள்ளனர். குடும்ப ஆட்சியில் ஒருவரை அறிவாளியாக காட்ட வேண்டும் என்றால், அவரின் அருகில் கோமாளிகளை உட்கார வைக்க வேண்டும். அதுவே தமிழக அமைச்சரவை.
தென் தமிழகத்தில் கனமழை பெய்தபோது, திருநெல்வேலி மேயர் எங்கிருந்தார் என்று தெரியுமா? சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பந்தல் போட்டுக் கொண்டிருந்தார். திருநெல்வேலியில் மழை பெய்தது.
ஆனால், மேயர் அங்கு இல்லை. சரி, மழை வந்துவிட்டது. பாதிப்புகளை பார்வையிட யார் செல்ல வேண்டும்? உள்ளாட்சித்துறை அமைச்சர் நேருவும், அமைச்சர் துரைமுருகனும் செல்ல வேண்டும். ஆனால், அங்கு சென்று யார் பார்த்தது, அமைச்சர் உதயநிதி. காரணம், முதல்வரைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார்.
சேலம் இளைஞரணி மாநாடு முடிந்த பின்னரோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னரோ, எப்படியாவது உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவதற்கு. அதற்கான ஒத்திகைதான் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம்.
ஃபார்முலா கார் பந்தயம், செஸ் ஒலிம்பியாட், ஏடிபி டென்னிஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். கோட் சூட் அணிந்தபடி இருக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் வரவேண்டும். உதயநிதி அறிவாளி ஆகிவிட்டார் என்பது போல தமிழக மக்களுக்கு காட்டுகிறார்கள். எப்படி தமிழ் சினிமாவில் ஹீரோவை அறிமுகப்படுத்துவார்களோ அதுபோல, உதயநிதிக்காக பில்டப் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது.
முதல்வரின் கவனம் எல்லாம் ஆட்சியில் இல்லை. அவரது கவனம் அனைத்தும் உதயநிதியை துணை முதல்வராக கொண்டுவந்து முதல்வராக்குவதில்தான் இருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை மிக எளிதாக முடிவுகளை எடுக்க முடியவில்லை. அறிவாலயத்தில் ஒரு நிமிடத்தில் முடிவெடுத்து, அதை தொண்டர்களுக்கு இரண்டு நிமிடத்தில் சொல்லி, தொண்டர்கள் அதை மூன்று நிமிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். இப்படித்தான் அறிவாலயத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. காரணம், இங்கு ஒரு குடும்பம் மட்டும் ஆட்சியில் இருக்கிறது.
ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை அவ்வாறு இல்லை. ஜனநாயகத்தை வளர்த்து கட்சியை வளர்ப்பதுதான் பாஜகவின் அழகே. உலகிலேயே உண்மையான பரிபூரணமான தலையில் தொடங்கி கால் வரை முழுமையாக ஒரு ஜனநாயகம் இருக்கும் கட்சி பாஜகதான். அதனால், கட்சியிலும் இயற்கையாகவே பிரச்சினைகளும் அதிகமாகத்தான் இருக்கும். அண்ணாமலையால் கட்டளையிட முடியாது. அண்ணாமலையும் இந்தக் கட்சியில் ஒரு தொண்டன், ஒரு சேவகன்” என்று தெரிவித்தார்