திருப்பூர் செய்தியாளர் மீது தாக்குதல்: தலைவர் அண்ணாமலை கண்டனம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தோல்வியடைந்துவிட்டதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஜனவரி 25) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;

திருப்பூர் பகுதி நியூஸ் 7 செய்தியாளர் சகோதரர் நேசபிரபு அவர்களை, சமூக விரோதிகள் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ள செய்தியறிந்து, மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேசபிரபு, விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தினசரி வாடிக்கையாகிவிட்டது. காவல்துறையின் கைகள் திமுக அரசால் முற்றிலுமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொதுமக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது. ஆனால், ஆட்சியின் தவறுகளையோ, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையோ, ஊடகங்கள் கேள்வி எழுப்பாமல், கேள்வி கேட்பவர்களையும் மௌனமாக்கவே முயல்கிறார்கள்.

அதிகாரத்தைக் கேள்வி கேட்கவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, மூத்த ஊடகவியலாளர்கள் விரும்புவதில்லை. நேர்மையான சில ஊடகவியலாளர்களும் சமூக விரோதிகளால் இது போன்ற தாக்குதலுக்கு உள்ளாவதால், அதிகாரத்துடன் அனுசரித்துச் செல்லவே அனைவரும் மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைப்பவர்களும், அதனை மக்களுக்காகப் பயன்படுத்துவதில்லை.

திமுக அரசில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வியடைந்துள்ளது. ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். திமுக அரசின் தோல்விகளை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைத்து, மயிலிறகால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. இது தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு குறித்த பிரச்சினை என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top