ஆன்மிகத்திற்கு எதிராக தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்: திட்டக்குடியில் தலைவர் அண்ணாமலை பேச்சு!

நமது பாரத தேசத்தின் ஆன்மீக தலைநகரம் தமிழகம். ஆனால் ஆட்சியாளர்கள் இங்கே ஆன்மீகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். இப்படி இருந்தால் தமிழகத்தின் பொருளாதாரம் எப்படி முன்னேறும்? டாஸ்மாக் சாராயம் மீது இந்த அரசு வைத்திருக்கும் நம்பிக்கையை, ஆலயங்கள் மீது வைத்தால் தமிழகம் செழிக்கும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண் என் மக்கள் யாத்திரைப் பயணம் நேற்று (ஜனவரி 24) கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

திட்டக்குடி சட்டமன்றத்தில் எழுச்சியுடன் கூடிய பொதுமக்கள் ஆரவாரத்தால், சிறப்பாக நடந்தேறியது. இது பகவான் ஸ்ரீராமரின் குல குருவான வசிஷ்ட முனிவர் வழிபட்ட, வைத்தியநாத பெருமாள் ஆலயம் அமைந்திருக்கும் தொகுதி. தீராத நோய்களையும் தீர்ப்பதால் இங்குள்ள இறைவனுக்கு வைத்தியநாதன் என பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

500 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தி ராமர் கோவில் என்பது, ஆன்மீகம் மட்டுமல்ல, அந்தப் பகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றமும், வாழ்வாதாரமும் சேர்ந்தது. ஸ்டேட் பேங்க் சமர்ப்பித்த ஆய்வறிக்கையின்படி, அடுத்த நிதி ஆண்டில் உத்தர பிரதேச மாநிலத்தில் ராமர் கோவிலின் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதன் மூலமாக, 20,000 முதல் 25,000 கோடி ரூபாய் வரிவருவாய் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மத வேறுபாடின்றி, அனைத்து மக்களும் பலனடைவார்கள். நமது பாரத தேசத்தின் ஆன்மீக தலைநகரம் தமிழகம். ஆனால் ஆட்சியாளர்கள் இங்கே ஆன்மீகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். இப்படி இருந்தால் தமிழகத்தின் பொருளாதாரம் எப்படி முன்னேறும்? டாஸ்மாக் சாராயம் மீது இந்த அரசு வைத்திருக்கும் நம்பிக்கையை, ஆலயங்கள் மீது வைத்தால் தமிழகம் செழிக்கும்.

கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷின் முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாஜக போராடிய பிறகே அவர் கைது செய்யப்பட்டார். திட்டக்குடி பெண்ணாடத்தில், கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் விஸ்வநாதன் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தூய்மைப் பணியாளர் ஒருவரை கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வைத்து, அந்தத் தூய்மை பணியாளரின் உயிர் அநியாயமாக பறி போனது. இவைதான் திமுக கூட்டணி, பொதுமக்கள் மீது வைத்திருக்கும் மரியாதை.

திட்டக்குடி தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான  பெண்ணாடம் மற்றும் திட்டக்குடியில் புறவழிச் சாலைகள், பெண்ணாடம் நகராட்சி, திட்டக்குடி மற்றும் பெண்ணாடத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், வெலிங்டன் ஏரிக்கரை உயர்த்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டு நீர்ப்பாசன வசதிகள், வெள்ளாற்றின் குறுக்கே கல்லப்பாடி முதல் காவனூர் வரை மேம்பாலம் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

ஆட்சிக்கு வரும் முன்னால் விவசாய நிலங்களை விவசாயிகளின் அனுமதி இல்லாமல் நாங்கள் எடுக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்த திமுக, தற்போது திட்டக்குடி வட்டத்தில் சுமார் 500 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு தொடுக்கிறது இந்த அரசு. இதுதான் திராவிட மாடல். புல்லூர் கிராமத்தில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதை அறிந்து இதனை எதிர்த்து முதன்முதலாக குரல் கொடுத்தது தமிழக பாஜக தான். கடந்த டிசம்பர் 15, 2023 அன்று, கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் சார்பில், திட்டக்குடி தாலுகா துணை தாசில்தார் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்க, விவசாய நிலங்களை அழித்து, அவற்றில்தான் தொழிற்பேட்டைகள் அமைப்போம் என்ற திமுகவின் பிடிவாதத்திற்கு எதிராக பாஜக எப்போதுமே குரல் கொடுக்கும்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஜாதி மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து, குடும்ப, ஊழல் அரசியல் நடத்தும் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, இம்முறை தமிழகம் முழுவதும் வாக்களிப்போம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top