அயோத்தி ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்டதற்காக அனைத்திந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் அமர் அகமது இலியாசிக்கு ஃபத்வா (நோட்டீஸ்) அனுப்பியிருக்கிறது ஷரியா வாரியம்.
அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிராணப் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், மத பெரியவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ராம ஜென்ம பூமி நில வழக்கின் மனுதாரர் உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
அதேபோல் அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் டாக்டர் இமாம் உமர் அகம்மது இலியாசிக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற பிரதிஷ்டை விழாவில் அவர் பங்கேற்றார்.
இந்த நிலையில் ராமர் கோவில் விழாவில் பங்கேற்றதால் தமக்கு கொலை மிரட்டல் வருவாக அவர் தெரிவித்துள்ளார். 2 நாள்கள் யோசித்த பின் விழாவில் பங்கேற்ற முடிவு செய்ததாகவும், எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், இந்த நாட்டை மதிப்பவர்கள், என்மீது அன்பு செலுத்துபவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் எனவும், இதனை ஏற்று கொள்ள முடியாதவர்கள் என்னை வெறுப்பவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியள்ளார்.