வாரணாசி கியான்வாபி மசூதியில் தமிழ், தெலுங்கு மொழி கல்வெட்டுகள்: தொல்பொருள் ஆய்வுத்துறை தகவல்!

வாராணசியில் உள்ள கியான்வாபி மசூதி சுவரில் தமிழ், தெலுங்கு மொழி கல்வெட்டுகள் இருப்பதை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டறிந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், வாராணசியில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் இந்துக்களின் முக்கியமான புனிதத் தலமாக விளங்கி வருகிறது. இக்கோவில் அருகே இஸ்லாமியர்களின் கியான்வாபி மசூதியும் அமைந்துள்ளது. இந்த மசூதி, காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துக் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக வாரணாசி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே கியான்வாபி மசூதி உள்ளே இருக்கும் கோவிலில் இந்துக்கள் சென்று வழிபடலாம் என வாரணாசி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

இந்த நிலையில் கியான்வாபி மசூதியின் சுவரில் தமிழ், தெலுங்கு மொழி கல்வெட்டுகள் இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த ஏஎஸ்ஐ இயக்குநர் (கல்வெட்டு) கே.முனிரத்னம் ரெட்டி தலைமையிலான நிபுணர்கள் குழுவினர் அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது மசூதியின் சுவரில் 34 கல்வெட்டுகள் இருந்ததாகவும், அதில் 3 கல்வெட்டுகள் தெலுங்கு மொழியில் உள்ளதாகவும், சில கல்வெட்டுகள் தமிழ், கன்னடம், தேவநாகரி மொழிகளில் உள்ளதாகவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆய்வு அறிக்கையையும் ஏஎஸ்ஐ இயக்குநர் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக முனிரத்னம் ரெட்டி கூறும்போது:

3 தெலுங்கு கல்வெட்டுகளும் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இதில் நாராயண பத்லு என்பவரின் மகன் மல்லண்ணா பத்லு உள்ளிட்டோரை பற்றி தகவல் எழுதப்பட்டுள்ளது. 1585-ல் காசி விஸ்வநாதர் கோவில் கட்டுமானப் பணிகளை தெலுங்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த நாராயண பத்லு என்பவர் மேற்பார்வையிட்டு வந்தார். 15-ம் நூற்றாண்டில் ஜவுன்பூர் பகுதியைச் சேர்ந்த ஹுசைன் ஷார்கி சுல்தான் என்பவர் (1458-1505) காசி விஸ்வநாதர் கோவிலை இடிக்க உத்தரவிட்டு கோவில் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துதான் 1585-ல் கோவில் மீண்டும் கட்டப்பட்டது.

அப்பகுதியை ஆண்டு வந்த ராஜா தோடர்மால், மீண்டும் காசி விஸ்வநாதர் கோவிலை கட்ட உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில்தான் நாராயண பத்லு மேற்பார்வையில் கோவில் கட்டப்பட்டது. கோவில்களை கட்டுவதில் மிகவும் புகழ்பெற்றவராக இருந்தார் நாராயண பத்லு. தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுகளும் இந்த உண்மையை தெளிவுபடுத்துகின்றன.

இந்த கல்வெட்டானது, கியான்வாபி மசூதி சுவரில் உள்ளது. தெளிவாக தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டு சற்று உடைந்த நிலையிலும், முழுமையற்று காணப்பட்டாலும், மல்லண்ணா பத்லு, நாராயண பத்லு பெயர்கள் தெளிவாக உள்ளன.

2 -வது தெலுங்கு கல்வெட்டு மசூதியின் உள்ளே கிடைத்தது. இதில் கோவி என்று எழுதப்பட்டுள்ளது. கோவி என்றால் ஆடு மேய்ப்பவர்கள் என்று பொருள்.

3-வது தெலுங்கு கல்வெட்டும் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததுதான். மசூதியின் வடக்குப் பகுதியிலுள்ள பிரதான நுழைவுவாயிலில் இந்த கல்வெட்டுக் கிடைத்தது. இதில் 14 வரிகள் உள்ளன. இதில் உள்ள தெலுங்கு எழுத்துகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளன. கோவிலில் இருந்த தூங்கா விளக்குகள் தொடர்பாக கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளன. மற்ற விஷயங்களை அதில் இருந்து பெற முடியவில்லை. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் கல்வெட்டுகளும் கோவிலில் காணப்படுகின்றன. கன்னடம், தேவநாகரி மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் அங்கு கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top