சென்னை கிழக்கு கடற்கரை ரயில் திட்டம், ஆவடி – ஸ்ரீபெரும்புதூர், கூடுவாஞ்சேரி ரயில் திட்டத்துக்கு 2024-25 பட்ஜெட்டில் தலா ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் வரையிலான 179.28 கி.மீ. தொலைவுக்கு கிழக்கு கடற்கரையோரம் புதிய ரயில் வழித்தடம் அமைக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
மேலும், சென்னை புறநகர் ரயில் வழித்தடங்களான சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தை இணைக்கும் வகையில் ஆவடி – ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி இடையே புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்துவது, திட்ட செயலாக்கத்துக்கு தலா ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிழக்குக் கடற்கரை சாலையை ஒட்டி ரயில்வே பாதை அமைக்க வேண்டும் என்பது விரைவில் நிறைவேற உள்ளது.