அயோத்தி ராமர் கோவிலில் ரூ.11.5 கோடி காணிக்கை: நிர்வாகம் தகவல்!

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா கடந்த மாதம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.

அதனை தொடர்ந்து அதற்கு மறுநாள் முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். தினமும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அது போன்று வரும் பக்தர்கள் பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் கோவிலுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுவரை ராமர் கோவிலுக்கு ரூ.11.5 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய கோவில் அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா, கடந்த 11 நாட்களில் மட்டும் கோவில் உண்டியல்களில் 8 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும், காசோலைகள் மற்றும் இணையவழி மூலம் 3.50 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கோவில் கருவறையில் நான்கு பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 11 வங்கிப் பணியாளர்கள் மற்றும் 3 கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களை உள்ளடக்கிய 14 பேர் கொண்ட குழு உண்டியல் நன்கொடை எண்ணிக்கையை நடத்துகிறது. அங்கு அனைத்தும் சிசிடிவி கேமராவின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top