ஊழலில் ஊறி திளைத்துப் போன தி.மு.க, தேர்தல் சமயத்தில் தவறான கருத்துகளை முன்வைத்து மக்களை திசை திருப்ப பார்க்கிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஹெச்.ராஜா பேசுகையில்,
‘‘கடந்த ஒரு வார காலமாக நாட்டு மக்களிடையே பொய்யான கருத்துகளை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் முயற்சியில் காங்கிரஸ், கழகங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். ஊழலுக்கு பெயர் போன தி.மு.க., மத்திய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதி பங்கினை தரமறுப்பதாக கூறுகிறது. அது முற்றிலும் தவறானது. மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பங்கினை ஒருபோதும் மறுக்க முடியாது.
ஏனெனில் ஒரு மாநிலத்தின் வருவாய் என்ன என்பதை கணக்கிட்டு நிதி பங்கினை முடிவு செய்வது மத்திய அரசின் நிதி ஆணையம் தான். அதை மத்திய அரசாங்கம் எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முடியாது. இன்னும் சொல்லப்போனால் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தின்போது மாநில அரசுகளுக்கு 32 சதவீதம் மட்டும் தான் நிதி பங்கீடு வழங்கப்பட்டு வந்தது. 2015-ல் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்பு மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் நிதி பங்கீடு 25 விழுக்காடு உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக வழங்கப்பட்டது. எனவே பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்பு மாநிலங்களுக்கான நிதி பங்கீடு உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி. வரிவசூலில் தமிழகம் தான் அதிக அளவில் பங்கீட்டுத்தொகை கொடுப்பதாக பேசுகிறார்கள். ஜி.எஸ்.டி.யை பொறுத்தவரை மத்திய அரசு, மாநில அரசு ஜி.எஸ்.டி என இரண்டு வகை உள்ளது. இதில் மத்திய அரசு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. தொகை மட்டுமே மத்திய அரசாங்கத்திடம் வந்து சேரும் மாநில அரசுக்கான ஜி.எஸ்.டி. தமிழகத்திற்குத்தான் முழுமையாக வந்து சேரும். அப்படியெனில் அந்த நிதியை இவர்கள் என்ன செய்தார்கள்.
சென்னை பெருவெள்ளம் முன்னேற்பாடுக்காக 4000 கோடி ரூபாய் செலவிட்டதாக அறிக்கை விட்டார்கள். ஆனால் துறை சார்ந்த அமைச்சர் பேசும்போது அதில் 42 சதவீதம் அளவு நிதி மட்டும்தான் செலவிடப்பட்டுள்ளது என கூறுகிறார். அப்படியானால் மீதி 58 சதவீத நிதி எங்கே போனது?. ஆகவே ஊழலில் ஊறி திளைத்துப் போன தி.மு.க, தேர்தல் சமயத்தில் தவறான கருத்துகளை முன்வைத்து மக்களை திசை திருப்ப பார்க்கிறது.
பா.ஜ.க.- அ.தி.மு.க கூட்டணி குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் கூறவேண்டும். ஏற்கனவே 2014ம் ஆண்டில் தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டு 19.5 சதவீத வாக்குகளை பெற்றது. இம்முறை பா.ஜ.க.வோடு கூட்டணி சேரும் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திப்போம். தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக வியாபார சங்கங்கள், வணிக அமைப்புகள், பொருளாதார அமைப்புகள், தொழில் அதிபர்கள் கூட்டமைப்பு உள்பட பல தரப்பினரையும் சந்தித்து பேசவிருக்கிறோம். அதன் அடிப்படையில் மத்திய அரசு அதிகாரத்திற்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை தேர்தல் வாக்குறுதிகளாக தயார் செய்வதற்கு முயற்சிப்போம்’’ என்றார்.