அரிசி விலை உயர திமுகவே காரணம்! விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் குற்றச்சாட்டு!

‘அரிசி விலை ஏற்றத்துக்கு தி.மு.க., அரசு தான் காரணம்,’ என பா.ஜ.க., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.

கோவையில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அரிசி விலை 10 ரூபாய் அதிகரித்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கடும் மழை அல்லது வறட்சி என, இயற்கை சமநிலை இருக்காது.

இதற்கு முன் டெல்டாவில் 20 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இன்று தி.மு.க., ஆட்சியில் 9 லட்சம் டன் நெல் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து நீர் பெற்றுத் தராததே, இதற்கு முக்கிய காரணம்.

காவிரியில் தி.மு.க., அரசு செய்த துரோகம், முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தாமல் மெத்தனம் காட்டியதால் நெல் உற்பத்தி குறைந்து அரிசி விலை உயர்ந்துள்ளது.

தமிழக அரசு வேளாண் பல்கலையை வாயிலாக, அட்சயா எனும் சன்ன ரக நெல் விதைகள் ஆராய்ச்சிக்கு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு அதை 30 ரூபாய்க்கு உற்பத்தி செய்ய முடியும்.

கர்நாடகா, ஆந்திர மாநில அரசுகள் இவற்றை உற்பத்தி செய்வதால் அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதனால் விலை அதிகரிக்கிறது.

மத்திய அரசு விவசாயிகள் மீது காட்டும் அக்கறையை, தி.மு.க., அரசு காட்டுவதில்லை. விவசாயிகளை தி.மு.க., அரசு துன்பப்படுத்தி வருகிறது; கனிமவள கொள்ளையில் அக்கறை காட்டி வருகிறது.

விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் தி.மு.க., அரசுக்கு, வரும் தேர்தலில் பாடம் புகட்டுவர்.

ஆவின் கடுமையான நஷ்டத்தில் இயங்குகிறது. பல இடங்களில் தனியார் பால் நிறுவனங்களை ஆவின் ஊக்குவிக்கிறது. இதனால், நஷ்டம் ஏற்படுகிறது.

விவசாயத்துக்கு, 100 நாட்கள் வேலை திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை.

அதேபோல் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பேபி அணையை பலப்படுத்தி 152 அடியாக நீரை உயர்த்தலாம் என தெரிவித்த பின்னரும் தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top