பட்டியலின சமூகத்தினருக்கு என வகைப்படுத்தப்பட்ட பஞ்சமி நிலத்தை, வேறு சமூக மக்கள் பயன்படுத்த முடியாது என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரியலூரில் பஞ்சமி நிலத்தை வகை மாற்றி பயன்படுத்தி வருபவரின் பட்டாக்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் தாத்தாவுக்கு, அதே கிராமத்தில் 1.12 ஏக்கர் பஞ்சமி நிலத்தை அரசு வழங்கியது.
இந்த நிலத்தை காமராஜின் தாத்தா 1963ல் பட்டியலினத்தை சேராதவருக்கு விற்றுள்ளார். அதன்பின் 2009- முதல் 2021 வரை அந்த நிலம் பல்வேறு நபர்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்த விற்பனை ஒப்பந்தங்களை ரத்து செய்து பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி ஆட்சியர் உள்ளிட்டோருக்கு காமராஜ் மனு அனுப்பினார்.
அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தன் மனுவை பரிசீலிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.ஞான பானு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை, பட்டியலினம் சாராதவருக்கு விற்பனை ஒப்பந்தம் செய்தது சட்ட விரோதம்.
இந்த நிலத்தை வகை மாற்றம் செய்ய முடியாது. இதை கண்காணிக்க அதிகாரிகள் தவறி உள்ளனர். தற்போது இந்நிலம் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு அந்த இடத்தில் பலர் வீடுகள் கட்டியுள்ளனர்.
மனுதாரருக்கு இந்த விபரம் தெரியவந்ததும், 2022ல் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசு தரப்பில் இருந்து இதுவரை வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
மனுதாரர் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெற்ற ஆவணங்களின்படி, சம்பந்தப்பட்ட நிலம் பஞ்சமி நிலம் என்பது தெளிவாகிறது.
பட்டியலினத்தவருக்கு என வகைப்படுத்தப்பட்ட இந்த நிலத்தை, வேறு சமூக மக்கள் பயன்படுத்த முடியாது. நிலத்தை வகை மாற்றம் செய்ய அரசுக்கும் அதிகாரம் இல்லை.
எனவே, மனுதாரர் குறிப்பிடும் அந்த நிலத்தை பயன்படுத்தி வரும் நபர்களிடம் இருந்து மீட்க வேண்டும். நிலத்துக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும்.
அந்த நிலத்தை வருவாய் பதிவேடு ஆவணங்களில் பஞ்சமி நிலம் என பதிவு செய்து தகுதியான நிலமற்ற பட்டியலின மக்களுக்கு அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.