தேசத்தின் 2.5 சதவிகித நிலப்பரப்புகளின் காற்றில், குரலாக ஒலித்துக் கொண்டிருந்த வானொலி, இன்றைய தினத்தில் 89.5 சதவிகித நிலப்பரப்பில் செவிகளுக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
வானொலி தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்;
“நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது” என்ற குரல், அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில், உலக மற்றும் நாட்டு நடப்புகளை நமக்கு தந்து கொண்டிருந்த வானொலிகளின் தினம் இன்று.
மிகவும் எளிய ஊடகமாக, அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்த பெருமை வானொலிக்கு உண்டு. 1927-ஆம் ஆண்டு தேசத்தின் முதல் வானொலி நிலையம் தொடங்கப்பட்டு, 1936-ஆம் ஆண்டு முதல் ‘அகில பாரத வானொலி நிலையம்’ செயல்பாட்டுக்கு வந்தது.
1947-ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்த காலத்தில், தேசத்தின் 2.5 சதவிகித நிலப்பரப்புகளின் காற்றில், குரலாக ஒலித்துக் கொண்டிருந்த வானொலி, இன்றைய தினத்தில் 89.5 சதவிகித நிலப்பரப்பில் செவிகளுக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கிறது.
தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து, இன்றளவும் நமது நெஞ்சங்களை ஆட்கொண்டு வரும் வானொலிகளில் இருந்து மிதப்பது, வெறும் காற்றல்ல; நமக்கான நினைவுகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.