டெல்லியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு கூட காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை. ஆனால் கூட்டணி தர்மத்திற்காக அக்கட்சிக்கு ஒரு தொகுதி வழங்க தயாராக இருப்பதாக ஆத்மி கட்சியின் எம்.பி., சந்தீப் பதக் தெரிவித்துள்ளார்.
ஊழல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இ.ண்.டி. என்ற கூட்டணியை அமைத்தது. அந்த கூட்டணி ஆரம்பம் முதல் தற்போது வரை காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இ.ண்.டி. கூட்டணியை ஆரம்பித்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், அதில் இருந்து வெளியேறி பாஜகவுடன் இணைந்துவிட்டார்.
மேற்கு வங்கத்திலோ காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என திரிணமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. பஞ்சாபிலும் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அறிவித்தார்.
இந்த நிலையில், டெல்லியில் தொகுதி பங்கீடு குறித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சந்தீப் பதக் கூறியதாவது: டெல்லியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு கூட காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை. ஆனால் கூட்டணி தர்மத்திற்காக, ஒரு தொகுதி வழங்க தயாராக உள்ளோம். டெல்லியில் ஆம் ஆத்மி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் திட்டத்தை முன்மொழிந்துள்ளோம், என்று கூறியுள்ளார்.
மாநிலம், மாநிலமாக கூட்டணி கட்சிகளால் விரட்டப்படும் காங்கிரஸ், எங்கு போவது என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் நிற்கிறது. இந்நிலையில்தான், நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா போட்டியிடப் போவதில்லை என்று செய்தியும், மாநிலங்களவை மூலம் அவர் உள்ளே செல்கிறார் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற அவையில் ஏற்கனவே காங்கிரசின் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் கார்கே. இப்போது சோனியா மாநிலங்களவை மூலம் உள்ளே செல்கிறார் என்ற செய்தி காங்கிரஸ் தனது தோல்வியை முழுமையாக ஒப்புக் கொண்டதாகிவிட்டது என்கிறார்கள் அரசியல்வாதி நோக்கர்கள்.