‘‘மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற வீடு கட்டும் திட்டத்துக்கு, ‘கருணாநிதி கனவு இல்லம் திட்டம்’ என்று எப்படி பெயர் வைக்கலாம்,’’ என்று தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று (பிப்ரவரி 22) மத்திய இணையமைச்சர் எல். முருகன், தலைவர் அண்ணாமலையை வரவேற்றார். விமான நிலையத்தில் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர், நடிகை த்ரிஷா குறித்து கருத்து தெரிவித்தது கண்டனத்துக்கு உரியது. காவல்துறை அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது.
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மொத்தம் நான்கு கோடி பேர் வீடு கட்டியுள்ளனர். அதற்கு தமிழகத்தில், ‘கருணாநிதி கனவு இல்லம் திட்டம்’ என்று பெயர் வைப்பது தவறு.
தமிழக பட்ஜெட்டில், ஒவ்வொரு முறையும் தகவல் தொழில்நுட்ப பூங்கா, கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது; தற்போதைய பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளனர். ஆனால், அப்படி எந்த பூங்காவும் கட்டப்படவில்லை. அது கோவை மக்களை தொடர்ந்து ஏமாற்றும் வெற்று அறிவிப்பாக உள்ளது.
கோவை நகருக்குள் வரும் ஆறு ரயில்களை, போத்தனூர் வழியாக திருப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கோவையின் வளர்ச்சிக்காகவும், போத்தனூர் ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவதற்காகவும், கோவை ரயில் நிலையத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ‘வந்தே பாரத்’ மற்றும் ‘உதய் எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் எளிதாக வந்து செல்வதற்காகவே, இந்த மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது.
எந்த ரயிலையும் நிறுத்தவோ, மாற்றிவிடும் திட்டமோ இல்லை. கோவையின் வளர்ச்சி ,போத்தனூருக்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.