பிரதமர் நரேந்திர மோடி வரும் 27, 28ல் தமிழகம் வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து, 27ஆம் தேதி மதியம் பிரதமர் நரேந்திர மோடி, விமானத்தில் கோவை சூலூர் வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் செல்கிறார். அங்கு பிற்பகல் 2:45 மணிக்கு தலைவர் அண்ணாமலையின், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பின் அவர் அங்கிருந்து, ஹெலிகாப்டரில் மதுரை செல்கிறார். மாலை 5:15 மணிக்கு டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் நடக்கும் வாகன துறைக்கான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான, ‘டிஜிட்டல் மொபிலிட்டி’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதில் தென்மாவட்ட தொழிலதிபர்களுடன், இந்திய அளவில் பெருந்தொழிலதிபர்களாக இருக்கும் மஹேந்திரா, பஜாஜ் போன்றோரும் பங்கேற்க உள்ளனர். டி.வி.எஸ்., நிறுவன அழைப்பின் பேரில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் பங்கேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடுகிறார்.
நிகழ்ச்சி முடிந்த பின் அன்று இரவு மதுரையில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்குகிறார். மறுநாள் காலையில், மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி செல்கிறார். குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற அரசு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
அங்கிருந்து, ஹெலிகாப்டரில் திருநெல்வேலி செல்லும் பிரதமர் மோடி, பகல் 11:15 மணிக்கு பா.ஜ.க., பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தமிழக பயணத்தை முடித்து, மஹாராஷ்டிரா மாநிலம் செல்கிறார்.