டெல்லியில்இருந்து,வெளிநாடுகளுக்குப் போதைப்பொருள் கடத்திய வழக்கில் திமுக நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் உள்ளிட்ட மூன்று பேருக்கு டெல்லி போலீஸ் வலை வீசி தேடிவருகிறது.
தேங்காய்ப் பவுடர் என்ற பெயரில், ரூ.2,000 கோடி போதைப் பொருளை சிலர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்திச் செல்வதாக, டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், டெல்லி போலீசார் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை ஏற்கனவே கைது செய்த நிலையில், மங்கை திரைப்படத் தயாரிப்பாளரும் திமுக அயலக அணியின் துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், இறைவன் மிகப்பெரியவன் படத்தின் நாயகன் மைதீன், சலீம் உள்ளிட்ட 3 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது. மேலும் ரூ.75 கோடி மதிப்புள்ள, 50 கிலோ போதைப்பொருளை டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டது திமுக நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என தெரிய வந்தது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில், மங்கை திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க., சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், போதை பொருள் கடத்தும் ஜாபர் சாதிக், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின், போலீஸ் டிஜிபி உள்ளிட்டோருடன் புகைப்படம் எடுத்துள்ளார். அது பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது. அது மட்டுமின்றி உதயநிதிக்கு நெருங்கிய நண்பர் எனவும் கூறப்படுகிறது.
போதைப் பொருள் கடத்திய பணத்தில், திரைப்படம் தயாரிப்பது மற்றும் திமுகவுக்கு அரசியல் நிதி வழங்குவது போன்ற செயலில் ஜாபர் சாதிக் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இவரை கைது செய்து விசாரித்தால் பல திமுக நிர்வாகிகள் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தலைமறைவாக உள்ளவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.