திமுக விரைவில் காணாமல் போகும் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று(28.02.2024) நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
திருநெல்வேலியில் அருளாசி தரும் நெல்லையப்பர் காந்திமதி அம்மனை வணங்குகிறேன் . இந்த நாட்டிற்காக உழைக்க எனக்கு நல்லாசி ஆசி வழங்க வேண்டுகிறேன்.திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள். தமிழ்நாடு மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது. மத்திய பாஜக அரசு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது. உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம். தமிழ்நாடு மக்கள் வருங்காலத்தை பற்றி மிகத் தெளிவுடன் இருக்கின்றனர்.
இந்தியா இன்று வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வெளிநாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு முன்னேறுகிறது .அதற்கான வளங்கள் தமிழகத்தில் உள்ளன .வெளிநாடுகளில் இந்தியர்களை மரியாதையோடு பார்க்கின்றனர் .இது மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சி .இதனை உணர்ந்த தமிழ் மக்கள் தற்போது பாஜகவை பின் தொடர்கின்றனர்.பாஜகவின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழக மக்களுடன் ஒத்துப்போகிறது. டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தூரம் குறைந்துவிட்டத
தமிழ் மொழி மீது நான் கொண்டிருக்கும் அபிமானம் உங்களுக்கு தெரியும் .செல்லும் இடமெல்லாம் தமிழின் பெருமையைப் பரப்புகிறேன் ஆனால் தமிழில் பேச முடியவில்லை என்ற ஏக்கம் என் மனதில் நிறைந்து இருக்கிறது .ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தமிழில் பேச முடிகிறது, முழுவதுமே தமிழில் பேச முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.
நான் பேசும் மொழியின் வார்த்தைகள் உங்களுக்கு புரியாவிட்டாலும், என் மனதை என் உள்ளத்தை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி . கரகோஷம் வாயிலாக ஆரவாரம் வாயிலாக அதை வெளிப்படுத்துகிறீர்கள் .இந்த அன்புக்காக இருகரம் கூப்பி உங்களை வணங்குகிறேன். எனக்கு ஆசி வழங்குங்கள்.
மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் பாரபட்சம் காட்டவில்லை. பட்டியல் சமூகத்தை சேர்ந்த தமிழ்நாட்டின் எல். முருகன் மத்திய அமைச்சரவையில் இருக்கிறார்.
தமிழ்நாட்டு நலனுக்காக நாங்கள் செய்யும் முயற்சிகளை இங்குள்ள மாநில அரசு தடுத்து வருகிறது. நாட்டை கொள்ளையடிக்கவே திமுக அரசு வளர்ச்சியைத் தடுக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு ஏன் தடுக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.இவர்கள் வளர்ச்சியை தடுப்பது நாட்டை கொள்ளை அடிப்பதற்காக .ஆனால் மோடி விடமாட்டேன் இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்துவேன் .
தமிழக மக்கள் திமுகவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியா 100 மடங்கு முன்னேறினால், தமிழ்நாடும் 100 மடங்கு முன்னேற வேண்டும்.
திமுக பொய்வேஷம் போடுகிறது, திமுக பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறது. திமுகவால் இங்கு இருக்க முடியாது. திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது. ஏனெனில் இங்கு அண்ணாமலை இருக்கிறார்.
பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக, காங்கிரஸ் கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும். திமுக வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏழை எளிய மக்களை பற்றி கவலை இல்லை. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலனே முக்கியம் என்று இருக்கிறார்கள்.
மத்திய அரசின் சீரிய திட்டங்களால் உலக அளவில் இந்திய மக்களுக்கான மரியாதை அதிகரித்துள்ளது. வெளிநாட்டிற்கு செல்லும் இந்தியர்களை மற்ற நாட்டினர் வியப்புடன் பார்க்கின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் பொறியியல் மற்றும் மருத்துவத்தை தமிழிலேயே கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு எனும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் வாயிலாக ,தமிழ் மொழியின் தன்மையும் வலிமையும் அதிகரிக்க உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகள் என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டம் எங்களிடம் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் உட்கட்டமைப்பில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி பெறும்.செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் வளர்ச்சி புதிய உயரத்தை எட்டும். 2024 தேர்தலில் வளர்ச்சியையும், தொலைநோக்கு பார்வையையும் கொண்டு பாஜக நிற்கிறது. ஆனால் திமுகவும் காங்கிரஸும் இதற்கு எதிராக நிற்கிறது.
தன் குடும்பம் தன் ஆட்சி என்பவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் அவர்களுக்கு உங்கள் பிள்ளைகள் குறித்து கவலை இல்லை உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மோடியாக நான் இருக்கிறேன் உங்கள் முன் நிற்கிறேன்..
5 ஆண்டுகளுக்கு முன் 21 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது, தற்போது தமிழகத்தில் 1 கோடி வீடுகளுக்கும் மேலாக குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளோம்.எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன 40 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் முலம் தமிழக பெண்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.
இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தார். அவரை ஒரு கீறல் கூட இல்லாமல் மீட்டோம்.இலங்கையில் நமது மீனவர்கள் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது அவர்களை மீட்டோம். இந்த மோடியை மீறி எவரும் இந்தியர்கள் மீது கை வைக்க முடியாது.இது மோடியின் உத்தரவாதம்.
10 ஆண்டுகள் ஆட்சி செய்த அனுபவம் தற்போது எனக்கு இருக்கிறது, இன்னும் இந்தியாவை முன்னேற திட்டங்கள் கொண்டு வரப்படும். மூன்றாவது முறையாக எனது தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் என்றார். அப்போது அங்கு இருந்த தொண்டர்களின் கைத்தட்டல்கள் விண்ணைப் பிளந்தது.